Skip to main content

ஓட்டல் உரிமையாளர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய இளைஞர்கள்!

Published on 06/01/2023 | Edited on 06/01/2023

 

tambaram chicken rice issue evidence in cctv footage 

 

சென்னை தாம்பரம் சேலையூர் அடுத்த மாடம்பாக்கம் அண்ணாநகர் மெயின் ரோட்டில் கிருதிஷ் செட்டிநாடு ஹோட்டல் என்ற பெயரில் துரித உணவகம் நடத்தி வருபவர் ராஜகீழ்பாக்கத்தைச் சேர்ந்த ஜெயமணி. இவரது கடையில் நேற்றிரவு 10.30 மணியளவில் அஜித், கார்த்திக் மற்றும் இருவர் வந்து நான்கு சிக்கன் ரைஸ் கேட்டுள்ளனர். கடையின் உரிமையாளரும் சிக்கன் ரைஸ் பார்சல் கட்டிக் கொடுத்துள்ளார். பார்சலை வாங்கிக் கொண்டு பணத்தை பிறகு தருவதாகக் கூறி சிக்கன் ரைஸை எடுத்துச் செல்ல முயன்ற போது, பணத்தைக் கொடுத்துவிட்டு எடுத்துச் செல்லுமாறு கடையின் உரிமையாளர் அறிவுறுத்தியுள்ளார்.

 

இதனால் அஜித் மற்றும் கார்த்திக் கடை உரிமையாளரிடம் வாக்குவாதம் செய்துவிட்டுச் சென்றுவிட்டனர். பின்னர் 11.15 மணிக்கு மேலும் 4 நண்பர்களுடன் உணவகத்திற்கு வந்த அஜித் ஓட்டல் உரிமையாளர் மற்றும் அவரது மகனை ஆபாசமாகத் திட்டி கடாயில் சூடாக இருந்த எண்ணெய்யை எடுத்து அவர்கள் மீது ஊற்றிவிட்டு அங்கு இருந்த அடுப்பு, பாத்திரங்களை எடுத்து சரமாரியாகத் தாக்கிவிட்டு உணவகத்தில் உள்ள பொருட்களையும் சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். இந்தச் சம்பவம் முழுவதும் கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

 

இதுகுறித்து தகவலறிந்து வந்த சேலையூர் போலீசார் தீக்காயமடைந்த ஜெயமணி, அவரது மகன் மணிகண்டன் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த கடையில் பணிபுரியும் ஊழியர்  நேமராஜ் ஆகியோரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட மாடம்பாக்கத்தை சேர்ந்த அஜித், கார்த்திக் (எ) ஹரிஹரன், பிரவின் (எ) ஜாகோ, சிவா, விக்கி உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனர். இது தொடர்பாக  5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த சேலையூர் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல்; பாஜக நிர்வாகிக்கு சம்மன்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
Summons to BJP executive in case Rs 4 crore in Chennai to Nellai train

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இத்தகைய சூழலில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த  06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளை பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் பாஜக தொழில்துறை மாநில துணைத்தலைவர் கோவர்தனின் உணவகத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  இந்த சோதனையில் ரூ.1.10 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. இந்த நிலையில், ரூ.4 கோடி பணம் கைப்பற்றப்பட்ட சம்பவத்தில் இவருக்கும் தொடர்பு உள்ளதா என விசாரிப்பதற்கு தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

Next Story

மயிலாடுதுறை டூ அரியலூர்? சிறுத்தை நடமாட்டத்தால் குழப்பத்தில் வனத்துறை!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Leopard movement near Ariyalur; Forest department in confusion

மயிலாடுதுறை மாவட்டம் நகரப் பகுதியில் உள்ள செம்மங்குளத்தில் கடந்த இரண்டாம் தேதி சிறுத்தை ஒன்று புகுந்தது. அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த தெரு நாய்களை வேட்டையாடும் வகையில் சிறுத்தை ஓடும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதுகுறித்து போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சிறுத்தையின் கால்தடத்தை வைத்து அதன் நடமாட்டத்தை வனத்துறையினர் உறுதி செய்தனர். அந்தப் பகுதியில் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் அங்கு முகாமிட்டு சிறுத்தையைப் பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தனர். இத்தகைய சூழலில் சிறுத்தை இடம்பெயர்ந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. அதாவது மயிலாடுதுறையில் இருந்து சுமார் 22 கிலோ மீட்டர் தூரம் இடம் பெயர்ந்த சிறுத்தை குத்தாலம் அருகே உள்ள காஞ்சிவாய் எனும் கிராமப் பகுதியில் சுற்றித் திரிவதாகத் தகவல்கள் வெளியானது. இந்தத் தகவலை அடுத்து  வனத்துறையினர் அந்தப் பகுதியில் முகாமிட்டனர். அந்தப் பகுதியில் சுமார் 15 இடங்களில்  தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கூண்டுகளும் அமைக்கப்பட்டது. அதோடு கடந்தாண்டு நீலகிரி அருகே உள்ள மசினகுடி பகுதியில் சுற்றித் திரிந்த ஆட்கொல்லி புலியான டி23 புலியைப் பிடிப்பதில் மிகுந்த நேர்த்தியாகச் செயல்பட்ட பொம்மன் மற்றும் காலன் ஆகிய இருவரும் மயிலாடுதுறை பகுதிக்கு வந்தனர். இவர்கள் வனத்துறையுடன் சேர்ந்து சிறுத்தையைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இத்தகைய சூழலில் மயிலாடுதுறை நல்லத்துக்குடியில் சிறுத்தையைப் பார்த்ததாகத் தொழிலாளி ஒருவர் வனத்துறைக்குத் தகவல் தெரிவித்திருந்தார். இந்த தகவலின் அடிப்படையில் வனத்துறை அதிகாரிகள் தெர்மல் ட்ரோன் உதவியுடன் நேற்று முன்தினம் நள்ளிரவில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதனால் மயிலாடுதுறையில் மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டு மக்கள் அச்சத்தில் உள்ளனர். இரவு நேரங்களில் பொதுமக்கள் தனியாகச் செல்ல வேண்டாம் எனவும் வனத்துறை சார்பில் மீண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் திருவாரூர் மாவட்ட வன அலுவலர் தலைமையிலான 20க்கும் மேற்பட்ட வனத்துறையினர் சம்பவ இடத்தில் முகாமிட்டு தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். 

Leopard movement near Ariyalur; Forest department in confusion

இந்நிலையில் அரியலூர் மாவட்டம் செந்துறையில் உள்ள மருத்துவமனையில் உள்ள வேலியின் சுவரில் சிறுத்தை ஏறி குதிக்கும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. இதன் மூலம் அரியலூர் அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களும் சிறுத்தையைப் பார்த்ததாக கூறியுள்ளனர். அதே சமயம் மயிலாடுதுறையில் நடமாடிய சிறுத்தையும், செந்துறையில் தென்பட்ட சிறுத்தையும் ஒன்றா என வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

மேலும் இது குறித்து மாவட்ட வன அலுவலர் இளங்கோவன் தெரிவிக்கையில், “சிறுத்தை பிடிபட்ட பின்னரே அதன் உடல் அமைப்பை வைத்தே மயிலாடுதுறையில் நடமாடிய சிறுத்தையும், செந்துறையில் தென்பட்ட சிறுத்தையும் ஒன்றா என உறுதிப்ப்படுத்த முடியும்” எனத் தெரிவித்தார். அரியலூரில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.