Skip to main content

நான்கு நாட்களாக போக்குகாட்டிவரும் 'டி23'- அச்சத்தில் தேவன் எஸ்டேட்!

Published on 28/09/2021 | Edited on 28/09/2021

 

 'T23' - God Estate in Fear!

 

நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள தேவன் எஸ்டேட் பகுதியில் புலி தாக்கியதில் படுகாயமடைந்த சந்திரன் என்பவர் கடந்த 24 ஆம் தேதி உயிரிழந்தார். ஏற்கனவே அந்தப் புலியால் அப்பகுதியில் இருவர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 'டி23' என்று அழைக்கப்படும் அந்தப் புலியால் கால்நடைகள் பல கொல்லப்பட்ட நிலையில், புலியைப் பிடிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் சந்திரன் என்பவர் 'டி23' புலி தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்தார். அதன்பிறகு கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சந்திரன் கடந்த 24 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

இதனால் கூடலூர் தேவன் எஸ்டேட் பகுதியில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். புலியைக் கண்டிப்பாகக் கூண்டு வைத்து வனத்துறையினர் பிடிக்க வேண்டும் என இதற்கு முன்பே பல போராட்டங்கள் நடைபெற்றும் புலியை தற்போது வரை பிடிக்கவில்லை எனக் கண்டித்து மீண்டும் போராட்டத்தில் இறங்கினர்.

 

கூடலூர், தேவன் எஸ்டேட் பகுதியில் மனிதர்களைத் தாக்கும் 'டி23' புலியைப் பிடிக்கும் வரை யாரும் வெளியே வரவேண்டாம் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் கடந்த  26 ஆம் தேதி தெரிவித்திருந்தார். தேவன் ஸ்டேட்  பகுதியில் உள்ள மக்களுக்குத் தேவையான உணவை வீடுகளுக்கே சென்று தரவும், அதேபோல் அந்த பகுதியில் இயக்கப்படும் அரசு பேருந்து சேவையைத் தற்காலிகமாக நிறுத்தவும் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டு புலியைப் பிடிக்கத் தீவிரமாக வனத்துறையினர் செயல்பட்டு வருகின்றனர்.

 

TIGER

 

நான்காவது நாளாக இன்றும் கூண்டுவைத்து புலியைப் பிடிக்கும் பணி நடைபெற்றது. கடந்த இரண்டு நாட்களாகப் போக்குகாட்டிவரும் புலி நேற்று தேவன் எஸ்டேட்டின் மேல்செண்டு பகுதியில் உள்ள ஒரு புதரில் பதுங்கியது. அந்த புதர் பகுதிக்குச் சென்று புலியை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கத் திட்டமிட்ட வனத்துறை அதற்கான உபகரணங்கள் இல்லாத நிலையில் கேரள வனத்துறையின் உதவியை நாடியது. கேரள வயநாட்டைச் சேர்ந்த வனத்துறையினர் தேவையான உபகரணங்களுடன் வந்து கூடலூர் வனத்துறையினருடன் சேர்ந்து புலியை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. அதேபோல் இன்று காலையும் அதே புதர் பகுதிக்குள் இருந்த புலியைப் புதரை விட்டு வெளியேற்றப் பட்டாசு வெடித்தனர். இன்று மதியம் 3 மணியளவில் புதரை விட்டு வெளியே வந்த புலி மீண்டும் வனப்பகுதியை நோக்கி நகர்ந்தது. தேயிலைத் தோட்டம் புதர் பகுதிகளைக் கொண்டது என்பதால் தொடர்ந்து 'டி23' புலியைப் பிடிப்பதில் சிரமம் உள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது. இவ்வளவு முயன்றும் புலியைப் பிடிக்கமுடியாதது தேவன் எஸ்டேட் பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்