புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து பள்ளிக் கூடங்கள், கல்லூரிகளுக்கு அருகே புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க வேண்டும் என்று பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து புகார்கள் கொடுத்து வந்த நிலையில், மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே சோதனைகள் செய்து புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல நேற்று(5.9.2023) மாலை நமணசமுத்திரம் காவல் சரகம் லெம்பலக்குடி அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அருகே உள்ள பெட்டிக்கடைகளில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகத் தகவல் அறிந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே மற்றும் போலீசார், உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்களுடன் சென்று திடீர் ஆய்வு செய்தபோது 3 கடைகளில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்டுள்ள பல வகையான புகையிலைப் பொருட்களும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
ஆய்வில் புகையிலைப் பொருட்களைக் கைப்பற்றி பறிமுதல் செய்ததுடன், உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்களிடம் பள்ளி அருகே புகையிலைப் பொருட்கள் விற்ற பெட்டிக்கடைகளுக்கு சீல் வைக்கவும் உத்தரவிட்டார். இதேபோல மாவட்டம் முழுவதும் கிராமங்களில் உள்ள ஏராளமான கடைகளிலும் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் பெற்றோர்கள்.