Skip to main content

தந்தை, மகன் உயிரிழப்பு; முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்

Published on 30/10/2023 | Edited on 30/10/2023

 

son dad incident Obituary of Chief Minister M. K. Stalin

 

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அடுத்துள்ள அயன் சிங்கம்பட்டியைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து (வயது 55). இவரது மகன் பேரின்பராஜா, (வயது 28). விவசாயிகளான இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் நள்ளிரவு மணிமுத்தாறு அருகே உள்ள விவசாய நிலத்திற்குத் தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளனர். அப்போது அங்கு சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி இவர்கள் இருவரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

 

போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக கால்வாய் தண்ணீரில் மர்ம நபர்கள் மின்சாரத்தை பாய்ச்சியுள்ளது தெரியவந்தது. இதையடுத்து சட்ட விரோதமாக மின்வேலி வைத்த மதிவாணன், அலெக்ஸாண்டர் என்ற இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வயலுக்குத் தண்ணீர் பாய்ச்ச சென்றவர்கள் மின்சாரம் தாக்கி இறந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

 

இந்நிலையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், அயன்சிங்கம்பட்டி கிராமம், மடத்துத் தெரு பகுதியைச் சேர்ந்த துரைசாமி மகன் பேச்சிமுத்து. இவரது மகன் பேரின்பராஜா ஆகிய இருவரும் நேற்று முன்தினம் (28.10.2023) இரவு ஜமீன்சிங்கப்பட்டியிலுள்ள தங்களது வயலுக்கு நீர் பாய்ச்ச வாய்க்காலில் இறங்கி மடையைத் திறக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக விலங்குகள் வருவதைத் தடுப்பதற்கு அமைக்கப்பட்டிருந்த மின்சார வலையில் சிக்கி மின்சாரம் தாக்கி இருவரும் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

 

son dad incident Obituary of Chief Minister M. K. Stalin

 

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு அவர்களது குடும்பத்தினருக்குத் தலா ஒரு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்