Skip to main content

' நீதிமன்றத்திற்கே வராதவர் சொத்தை நீதித்துறை பாதுகாக்க வேண்டுமா?'-நீதிமன்றம் கேள்வி

Published on 22/10/2024 | Edited on 22/10/2024
"Should the Judiciary protect the property of a person who does not appear in court?"-Court Question

நித்யானந்தா தலைமறைவாக இருந்துகொண்டு இந்திய நீதித்துறைக்கே சவால் விடுவதாக மதுரை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது.

கர்நாடக மாநிலம் பிடதியில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்தை சேர்ந்த சுரேகா என்ற பெண் சீடர் மதுரை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், 'விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கணேசன் என்பவருக்கு சொந்தமான 45 ஏக்கர் நிலத்தை நித்தியானந்தாவின் அறிவுறுத்தலின் பேரில் அபகரிக்க முயன்றதாக எங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் நாங்கள் அப்படி எந்த முயற்சியும் செய்யவில்லை. பொய்யான புகாரை கொடுத்து எங்கள் மீது வழக்கு செய்திருக்கிறார்கள். எனவே தனக்கு முன்ஜாமீன் வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என புகார்தாரர் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த இடத்தின் உரிமையாளர் கணேசன் ஏற்கனவே நித்தியானந்தா தொடர்பான வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக இருக்கிறார். மைசூர் ராம்நகர் நீதிமன்றத்தின் வழக்கு நிலுவையில் இருக்கிறது. நித்தியானந்தாவின் சீடர்கள் அச்சுறுத்தும் வகையில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என வாதிடப்பட்டது.

'நித்யானந்தா தலைமறைவாக இருந்துகொண்டு இந்தியாவின் நீதித்துறைக்கு சவால் விடுகிறார். அவருக்கு எதிராக பல்வேறு வழக்குகள், பிடிவாரண்டுகள் உள்ளது. ஆனால் அவர் எந்த வழக்கிலும் ஆஜராவதில்லை, நீதிமன்றத்திற்கும் வருவதில்லை. ஆனால் அவருடைய சொத்துக்களை மட்டும் இந்திய நீதித்துறை பாதுகாக்க வேண்டுமா? தொடர்புடைய  இட விவகாரத்தில் தலையிட மாட்டேன் என மனுதாரர் உத்தரவாத பத்திரத்தைத் தாக்கல் செய்தால்  முன்ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்' என்று தெரிவித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தார்.

சார்ந்த செய்திகள்