அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார். அதேசமயம் அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக அவர் முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பிறகு நீதிமன்றத்தின் அனுமதியோடு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு நாளை காலை அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் செந்தில் பாலாஜி கைது தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் அமலாக்கத்துறையிடம் அறிக்கை கேட்டுள்ளது.
செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட பொழுது மனித உரிமை மீறப்பட்டிருப்பதாகவும், உரிய நடைமுறைகள் பின்பற்றப்படாமல் அவர் கைது செய்யப்பட்டதாகவும், அவருடைய கைது குறித்து அவருடைய மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கவில்லை என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பான புகாரை விசாரித்த மாநில மனித உரிமைகள் ஆணையம் ஆறு வார காலத்திற்குள் அமலாக்கத்துறையில் இணை ஆணையர் பொறுப்பில் இருக்கக்கூடிய அதிகாரி இதற்கு உரிய விளக்கமான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.