Skip to main content

“இந்தி வேணாம் போடா” - பேரணியில் சீமான் 

Published on 02/11/2022 | Edited on 02/11/2022

 

 Seeman at the "no need hindi" rally; naam thamilar party

 

மத்திய அரசு இந்தித் திணிப்பில் ஈடுபடுவதைக் கண்டித்து தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்தித் திணிப்பைக் கண்டித்தும், நவம்பர் ஒன்று தமிழ்நாடு நாள் என்பதற்காகவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் பெ.மணியரசன், இயக்குநர் அமீர் ஆகியோர் சென்னை ராஜரத்தினம் கலையரங்கத்திலிருந்து பேரணியாகச் சென்றனர். இந்த பேரணியில் பலரும் இந்தித் திணிப்புக்கு எதிராக முழக்கமிட்டனர். 

 

பேரணி முடிந்ததும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூட்டத்தில் பேசினார். அப்போது, “தமிழ்நாடு அரசு வடஇந்திய மக்களுக்கு வாக்குரிமை கொடுக்கக் கூடாது. எனது அடுத்த போராட்டம் அதுதான். கட்டாய இந்தியை இந்திய ஆட்சியாளர்கள் மறந்துவிட வேண்டும். அது மிகப்பெரிய மொழிப்போரை நாங்கள் முன்னெடுக்க வழிவகுக்கும். அதன் பின் சட்ட ஒழுங்கிற்கு கட்டுப்பட்டு குறுகிய இடத்தில் கூட்டம் போடுவதற்கெல்லாம் நான் கட்டுப்பட மாட்டேன். நான் ஒப்புக்கு கட்டாய இந்தி திணிப்பிற்கு போராடவில்லை. உளமார போராடுகிறேன். எங்களுக்கு ‘இந்தி தெரியாது போடா’ இல்லை. ‘இந்தி வேணாம் போடா.’ 

 

ஆட்சியாளர்களின் கவனத்திற்குச் சொல்லுகிறேன். பல மொழி என்றால் இந்த நிலப்பரப்பு ஒன்றாக இருக்கும். ஒரே மொழி என்றால் பல நாடுகள் பிறக்கும். இது உறுதியாக நடக்கும். இந்திய அலுவல் மொழியாக ஆங்கிலம் இருக்கிறது. அதுவே இருக்கட்டும். இந்தி பேசும் மாநிலங்களில் இந்தியை நீங்கள் அலுவல் மொழியாக வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் எங்கள் நிலத்தில் தமிழ் தான் அலுவல் மொழியாக ஆட்சி மொழியாக இருக்க வேண்டும்” எனக் கூறினார். 

 


 

சார்ந்த செய்திகள்