Skip to main content

ஷாருக்கான் மகனைக் குறி வைப்பதா? - சீமான் கண்டனம்

Published on 26/10/2021 | Edited on 26/10/2021

 

fj


பாலிவுட் திரையுலகின் உச்ச நட்சத்திரமான ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான், கடந்த 2ஆம் தேதி போதைப்பொருள் விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக எட்டு பேரைக் கைது செய்துள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவினர், அவர்களிடம் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திவந்தனர். இதையடுத்து, ஆர்யன்கான் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் பிணை கேட்டு ஆர்யன்கான் தரப்பு தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சில நாட்களுக்கு முன்பு இந்த வழக்கு தொடர்பாக ஷாருக்கான் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. 

 

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "நடிகர் ஷாருக்கானின் மகனான ஆர்யன்கானைப் போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கைதுசெய்த வழக்கில் அதிகார அத்துமீறலும், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளும் நடந்தேறி வருவது நாடெங்கிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர் ஒரு இசுலாமியர் என்பதாலேயே, அவரைக் குறிவைத்து அரசதிகாரம் காய்களை நகர்த்தி வருவது கடும் கண்டனத்திற்குரியது. ஆர்யன்கானை விடுவிக்க 25 கோடிகள் வரை பேரம் பேசப்பட்டன என்று வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. ஆர்யன்கானைப் பிணையில் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு, போதை விருந்து நடந்ததாகச் சொல்லப்படும் சொகுசுக்கப்பல் நிர்வாகத்தின் மீது எடுத்த நடவடிக்கையென்ன? என்பது குறித்து எதுவும் தெரியவில்லை. தவிர்க்க இயலா பல்வேறு ஐயங்களும், விடைதெரியா கேள்விகளும் எழும் நிலையில், ஷாருக்கானின் மகன் என்பதாலேயே, இவ்வழக்கில் ஆர்யன்கான் சிக்க வைக்கப்பட்டுள்ளார் எனும் வாதத்தில் உண்மையில்லாமல் இல்லை.

 

குஜராத் மாநிலத்தில் அதானி குழுமத்தால் நடத்தப்படும் முந்த்ரா துறைமுகத்தில் 2,988.21 கிலோ எடையும், 21,000 கோடியிலான சந்தை மதிப்பும் கொண்ட போதைப்பொருள் கடத்தப்பட்ட வழக்கில் ஆர்வம் காட்டாத மத்தியில் ஆளும் பாஜக அரசு, போதைப்பொருள் பயன்படுத்தியதாக ஆர்யன் கானை கைதுசெய்த வழக்கில் காட்டும் முனைப்பும், தீவிரமும் பாஜக அரசின் அப்பட்டமான அதிகார தலையீட்டையும், அரசியல் இலாப நட்ட கணக்கீடுகளையுமே காட்டுகிறது. முந்த்ரா துறைமுகத்தில் போதைப்பொருள் கடத்தப்பட்ட விவகாரத்தில் பின்புலத்திலுள்ள வலைப்பின்னல் குறித்தும், கடத்தல் பெரும் புள்ளிகள் குறித்தும் வாய்திறக்காது, அவர்கள் மீது சட்ட நடவடிக்கைகளைப் பாய்ச்சாத இந்நாட்டின் ஆட்சியாளர்கள், ஆர்யன்கான் வழக்கில் காட்டும் அதீதக்கவனம் இயல்பானதல்ல.

 

பழங்குடி மக்களுக்காகப் போராடிய பெருமகன் ஐயா ஸ்டேன் சுவாமி அவர்களைப் பொய்யான வழக்கில் கொடுஞ்சட்டத்தைக் கொண்டு பிணைத்து, அவரைச் சிறைக்குள்ளேயே சாகடித்த இந்நாட்டின் ஆட்சியாளர்கள், தங்களது அரசியல் ஆதாயத்திற்காகவும், பழிவாங்கல் போக்குக்காகவும் எதை வேண்டுமானாலும் செய்வார்கள்; எவரை வேண்டுமானாலும் கைதுசெய்வார்கள் என்பது வெளிப்படையானது. அந்த வகையில், குடியுரிமைச் சட்டத்திருத்தத்திற்கெதிராகப் போராடியதற்காக உமர் காலித், சர்ச்சில் இமாம், அப்துல் காலித், சைபி, இஷ்ரத் ஜான், மீரான் ஹைதர், குல்பீ ஷா, ஷீபா உர் ரகுமான் போன்றவர்களையும், உத்திரப்பிரதேசத்தில் ஒடுக்கப்பட்ட பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் குறித்துச் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் சித்திக் கப்பனையும் இசுலாமியர் எனும் ஒற்றைக் காரணத்திற்காகவே, ஊபா சட்டத்தின் கீழ் சிறைப்படுத்தி வதைத்து வருவது அரசப்பயங்கரவாதத்தின் உச்சமாகும். மதச்சார்பின்மை எனும் மகத்தான கோட்பாட்டினைக் குலைத்து, சொந்த நாட்டு மக்களையே மதத்தால் பிளந்து பிரித்து, மத ஒதுக்கல் செய்யும் மத்தியில் ஆளும் மோடி அரசின் செயல் வெட்கக்கேடானது. பாஜக அரசின் இக்கொடுங்கோல் செயல்பாடுகளுக்கு வன்மையான எதிர்ப்பைப் பதிவுசெய்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்