Skip to main content

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பள்ளி மாணவி பலி!

Published on 06/12/2021 | Edited on 06/12/2021

 

Schoolgirl passed away by river flood

 

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்துவந்த மழையின் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணையாறு, வராக நதி, மலட்டாறு, கெடிலம் ஆறு உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. ஆபத்தை உணராமல் பலர் ஆற்றில் குளிப்பதற்கும், வேடிக்கை பார்க்கவும் செல்கின்றனர். மேலும், செல்ஃபோனில் செல்ஃபி எடுப்பதும், தூண்டில் போட்டு மீன் பிடிப்பதற்காக இறங்குவதும் வாடிக்கையாக நடந்துவருகிறது. இதனை அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் எச்சரித்தும் கேட்காமல், ஆபத்தை உணராமல் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு பலர் உயிரிழக்கிறார்கள்.

 

அப்படிப்பட்ட ஒரு சம்பவம் நேற்று (05.12.2021) நடந்துள்ளது. விழுப்புரம் அருகே உள்ள சேர்ந்தநூரைச் சேர்ந்த நடராஜன் என்பவரது மகள் 16 வயது வினிதா, 13 வயது அபி மற்றும் அவர்களது தோழிகள் உட்பட 5 பேர் நேற்று அவர்கள் கிராமத்தின் அருகே ஓடும் தென்பெண்ணை ஆற்றில் இறங்கி குளிக்கச் சென்றுள்ளனர். குளிக்கும்போது ஆழமான பகுதிக்குச் சென்று ஆனந்தமாக குளித்துள்ளனர். அப்போது ஐந்து பேரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் விவசாய வேலை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் ஓடிச்சென்று ஆற்றில் குதித்து 5 மாணவிகளையும் கரைக்குக் கொண்டு வந்தனர். இதில் வினிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

 

அபி, உடல்நிலை பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். ஏனைய மூவரும் நல்ல நிலையில் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து வளவனூர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இறந்துபோன வினிதா, விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்துவரும் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் மற்றும் வருவாய்த்துறையினர், காவல்துறையினர் என பல்வேறு துறை அதிகாரிகளும் அலுவலர்களும் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார்கள். கிராமங்கள்தோறும் ஒலிபெருக்கி மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்