Skip to main content

சேலத்தில் 21 டன் கலப்பட ஜவ்வரிசி பறிமுதல்!

Published on 19/11/2019 | Edited on 19/11/2019

சேலத்தில் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட 21 டன் கலப்பட ஜவ்வரிசியை லாரியுடன் உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


சேலம் அஸ்தம்பட்டி பகுதியில், ஒரு லாரியில் கலப்பட ஜவ்வரிசி சரக்குகளை ஏற்றிச் செல்வதாக, சேகோ சர்வ் நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நிர்வாகிகள் அஸ்தம்பட்டி பகுதி அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் சரக்குடன் சென்று கொண்டிருந்த லாரியை மடக்கிப் பிடித்தனர். 

salem 21 ton mixing sago seizure food quality officers raid


அந்த லாரியில் உரிய உரிமம், ரசீது ஆவணங்கள் இல்லாமல் ஜவ்வரிசி கொண்டு செல்லப்படுவது தெரிய வந்தது. சேகோ சர்வ் நிர்வாகிகள் லாரியை சரக்குடன் வணிகவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும், உணவுப்பாதுகாப்புத்துறைக்கும் தகவல் அளித்தனர்.


சோதனையில், லாரியில் ஏற்றப்பட்டிருந்த தலா 30 கிலோ எடையுள்ள 708 மூட்டைகளில் இருந்த 21 டன் ஜவ்வரிசியும் கலப்படமானது என்பது தெரிய வந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றில் இருந்து நான்கு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, உணவுப் பகுப்பாய்வுக் கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.


மேலும், ஜவ்வரிசி உரிமையாளரான ஆத்தூரைச் சேர்ந்த ஒருவருக்கு உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விளக்கம் கேட்டு குறிப்பாணை அனுப்பினர். சம்பந்தப்பட்டவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுப்பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் கதிரவன் கூறினார். 

 

சார்ந்த செய்திகள்