
புதுச்சேரி ரெயின்போ நகர் 9-ஆவது குறுக்கு தெருவில் வசிப்பவர் இம்மானுவேல் தாமஸ்(43). நகரப்பகுதியில் காஸ்மெடிக் ஷாப் நடத்தி வருகிறார். இவரது மனைவி தெய்வக்கனி (40), அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றுகிறார். இமானுவேல் தாமஸ் சம்பவத்தன்று தனது வீட்டின் முதல் மாடியில் உள்ள அறையில் மனைவி, இரண்டு குழந்தைகளுடன் படுத்திருந்தார். வீட்டின் உட்புறம் வழியாக படிக்கட்டு என்பதால் கீழ்த்தளத்தில் உள்ள மெயின் கதவை உட்புறமாக பூட்டி விட்டு தூங்கச் சென்று இருந்தார். நள்ளிரவு யாரோ மர்ம நபர்கள் இரும்பு கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அங்கு கீழ்தளத்தில் இருந்த அறைக்கு சென்ற மர்ம நபர்கள் சாவியுடன் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 60 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
மறுநாள் காலை கீழே வந்த செவிலியர் தெய்வக்கனி கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். ரூபாய் 22 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து பெரியகடை காவல்நிலையத்தில் தாமஸ் தகவல் கொடுத்தார். கிழக்கு எஸ்.பி ரட்சனாசிங் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் கொள்ளை நடைபெற்ற வீட்டை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டன.
இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கதவை உடைத்து, நகைகளை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.