Skip to main content

அடுத்தடுத்த கொள்ளைகளால் அதிரவைக்கும் கொள்ளைக் கூட்டம்! - அச்சத்தில் பொதுமக்கள்!

Published on 20/04/2021 | Edited on 20/04/2021

 

The robbers involved in the next series of robberies  People in fear

 

விழுப்புரம் மாவட்டத்தில் துப்பாக்கிக் கலாச்சாரம் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் துப்பாக்கி முனையில் ரியல் எஸ்டேட் முதலாளி ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். அடுத்த நாள் இரவு திண்டிவனம் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர்களில், காரில் வந்த கொள்ளைக் கும்பல் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்து விட்டுத் தப்பிச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டிவனம் நகரின் ஒரு பகுதி ஜக்கம்மா பேட்டை, இங்கு வசித்து வருபவர் 29 வயது குமார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர் வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தார். 

 

இவருக்குச் சொந்தமான இரண்டு இருசக்கர வாகனம் வீட்டிற்குப் பின்புறம் நிறுத்தப்பட்டிருந்தது. அதைக் கொள்ளையடிக்க வந்த கும்பல், அதில் ஒரு பைக்கை திருடிச் சென்றனர். இவரது பக்கத்து வீட்டில் வரதராஜன் என்ற ஓய்வு பெற்ற ஆசிரியர் வசித்து வருகிறார். இவரது வீட்டின் முன்பக்கக் கதவின் பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த எல்இடி டிவியை தாங்கள் கொண்டு வந்த காரில் எடுத்துச் சென்றனர். அதற்கு அடுத்த வீட்டில் ஆசிரியர் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். கொள்ளையர்கள் அந்த வீட்டுக்குள் நுழைந்ததும், சத்தம் கேட்டுள்ளது. அப்போது லோகநாதன் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்தனர். உடனே கொள்ளைக் கும்பல் அவர்கள் வந்த காரில் ஏரி தப்பிவிட்டனர். 

 

அதே கும்பல் கன்னிகாபுரம் பகுதியிலுள்ள ஞானசேகரன் என்பவர் வீட்டுக்குள் கொள்ளையடிக்கச் சென்றனர். அங்கு அவரது மனைவி வளர்மதி மற்றும் மகன், மருமகள், குழந்தைகள் என நிறைய பேர் காற்றோட்டத்திற்காக கதவைத் திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில், கொள்ளைக் கும்பல் அந்த வீட்டுக்குள் சுலபமா உள்ளே புகுந்தது. அங்கிருந்த பொருட்களை கொள்ளையடிக்க முயன்ற போது, சத்தம் கேட்டு ஞானசேகரன் எழுந்துவிட்டார். அவரைப் பார்த்த கொள்ளையர்கள் தங்கள் கையில் வைத்திருந்த துப்பாக்கி, கத்தி, இரும்பு ராடு ஆகிய ஆயுதங்களைக் காட்டி, 'சத்தம் போட்டால் கொலை செய்து விடுவோம்' என்று மிரட்டியுள்ளனர். 

 

இந்தச் சத்தம் கேட்டு ஞானசேகரின் மகன்கள் கூச்சல் போட்டுள்ளனர். இந்தக் கூக்குரல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் திருடர்கள் வந்திருப்பதை அறிந்து கையில் தடி போன்ற ஆயுதங்களை எடுத்துக்கொண்டு கொள்ளையர்களை மிரட்டியுள்ளனர். அவர்கள் கொண்டு வந்த காரில் தப்பிச் செல்ல முயன்றனர். அதைக் கண்ட பொதுமக்கள் காரின் கண்ணாடியை உடைத்தனர். இதனைக் கண்டு மிரண்டு போன கொள்ளைக் கும்பல் கார் மற்றும் அதனுள்ளே இருந்த டிவி ஆகிய பொருட்களை அங்கேயே விட்டுவிட்டு திருடிய இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர். அதையடுத்து மரக்காணம் சாலை காமராஜர் நகரில் பிலவேந்திரன் என்பவரது வீட்டில் இந்த கொள்ளைக் கும்பல் புகுந்துள்ளது. 

 

அந்த குடும்பத்தினரயைும் துப்பாக்கி காட்டி மிரட்டி அவரது மகன் அருண்குமார் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் செயினை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர். அதை அடுத்து திண்டிவனம் அருகிலுள்ள வட ஆவணம்பட்டு, ஆலப்பாக்கம் ஆகிய ஊர்களிலும் புகுந்து தங்கள் கைவரிசையைக் காட்டி விட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் இந்த கொள்ளைக் கும்பல். திண்டிவனம் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஒரே இரவில் புகுந்து அட்டகாசம் செய்துள்ளனர். இதனால் பொதுமக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர். 

 

இந்த தகவல் அறிந்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், திண்டிவனம் டிஎஸ்பி கணேசன், மைலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் போலீசார் விரைந்து சென்று சம்பவம் நடந்த இடங்களைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கொள்ளையர்கள் விட்டுச் சென்ற கார் ஹரியானா மாநிலப் பதிவு எண் கொண்டதாக உள்ளது என்றும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களா அல்லது வட மாநிலத்தைச் சேர்ந்த காரை பயன்படுத்தி தமிழகத்தைச் சேர்ந்த கொள்ளையர்கள் அட்டகாசம் செய்துள்ளனரா? இப்படி பல்வேறு கோணங்களில் கொள்ளையர்களை தீவிரமாகத் தேடிவருகிறது காவல்துறை.

 

 

 

 

சார்ந்த செய்திகள்