Skip to main content

அரிசி ஆலையால் மூச்சுத்திணறல்! ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியல்!

Published on 16/06/2020 | Edited on 16/06/2020

 
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள திருச்சி சாலையில் அதிக அளவில் குடியிருப்புகள் மற்றும் கடைகள் உள்ளது. இந்தநிலையில் அந்தப் பகுதியில் உள்ள அலமேலு அம்மாள் அரிசி ஆலை மாடன் ரைஸ் மில்லில் இருந்து அதிக அளவில் நெல் உமி சாம்பல் மற்றும் கழிவு நீர் தொடர்ந்து வெளியேறிக் கொண்டே இருந்துள்ளது.
 

 

கறுப்பு நிறத்தில் வெளியேறும் நெல் உமி சாம்பலால் கடும் அவதிக்கு ஆளான மக்களுக்கு மூச்சுத்திணறலும் ஏற்பட தொடங்கியதை அடுத்து இது தொடர்பாக பல்வேறு துறை அதிகாரிகளுக்கு 9 முறை புகார் மனு அனுப்பியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் கரோனா காலகட்டத்தில் அலமேலு அம்மாள் அரிசி ஆலை மாடன் ரைஸ் மில் ஆலையால் மூச்சுத்திணறலுக்கு ஆளாகி வந்த மக்கள் பலமுறை புகார் அனுப்பியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்து சம்மந்தப்பட்ட ஆலை அருகே மணப்பாறை – திருச்சி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது மறியலில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் கைது செய்வதாகக் கூறியதையடுத்து ஆத்திரமடைந்த மக்கள் போலீசாருடன் கடும்வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு சம்பவ இடத்திற்கு வந்த மணப்பாறை வட்டாட்சியர் தமிழ் கனியிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தனியார் அரிசி ஆலையில் இருந்து வெளியேறும் நெல் உமி சாம்பல் மற்றும் கழிவுநீரால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள நிலையில் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் சம்மந்தப்பட்ட அரிசி ஆலைக்கு தான் அதிகாரிகள் துணை போகிறார்கள். கரோனா காலத்தில் வீட்டில் இரு என்கிறது அரசு, ஆனால் வீட்டில் இருந்தால் கரித்தூளை சுவாசித்துச் சாகவேண்டியதுதானா என்று கூறி தொடர்ந்து கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 

http://onelink.to/nknapp


பின்னர் பொதுமக்களை அதிகாரிகளும் போலீசாரும் சமாதானம் செய்து உரிய நடவடிக்கை உடனடியாக மேற்கொள்வதாகக் கூறியதை அடுத்து மக்கள் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர். இதனால் அந்தப் பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.


 

சார்ந்த செய்திகள்