முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு வா.புகழேந்தி ஒருங்கிணைப்புக் குழு சார்பில் அவரது ஆதரவாளர்களுடன் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். அதன்பின்பு ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்திற்கு நேரில் சென்று அங்குள்ள ஜெயலலிதா திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா, அவரது கணவர் மாதவன் மற்றும் நிர்வாகிகளும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பிரின்ஸ், குத்தாலம் கஜேந்திரன், ஆனந்த் உக்கடம் ஜாகிர் உசேன், மதிவாணன், துதிமுகன், மனோகர் ஆகியோரும். மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதன்பிறகு பேசிய புகழேந்தி, “நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்திற்கும் முதல்வர் அலுவலகமாக இயங்கிய இந்த சரித்திரம் வாய்ந்த இடத்திற்கும் வருகை தந்து அவர்கள் படத்திற்கு மரியாதை செலுத்தியது மனதிற்கு ஆறுதல் அளித்துள்ளது. ஜெயலலிதா உயிரோடு இருந்த பொழுது நேரில் காணுவதற்காக தொடர்ந்து பல வருடங்கள் இந்த வீட்டிற்கு வந்ததும், அப்பொழுது நடந்த நிகழ்வுகளும் மனதில் இருந்து மறையாதவை. இந்த இல்லத்தை பொறுத்தவரை நாங்கள் அனைவரும் போற்றி புகழ்படும் கடவுள் வாழ்ந்த இல்லமாக பார்க்கிறோம்.
மனதிற்கு ஒரு நிம்மதி ஏற்படுகிறது. பல சட்டங்களும், திட்டங்களும் இங்கேதான் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டது” என்பதனை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.