Skip to main content

சீருடையில் இருந்த காவலரை தாக்கிய பொதுமக்கள்..! 

Published on 22/04/2021 | Edited on 22/04/2021

 

The public who attacked the policeman in uniform ..!

 

மீன் வியாபாரி ஒருவருக்கு சம்மன் வழங்க சென்ற காவலரை வியாபரிகள் மற்றும் பொதுமக்கள் தாக்கியுள்ளனர். மேலும், அவர் பணி நேரத்தில் மது போதையில் இருந்ததாக குற்றம்சாட்டுகின்றனர். 

 

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் இயங்கிவரும் அக்னி பஜாரில் மீன் வியாபாரம் செய்துவருபவர் சரவணன். இவருக்கு சம்மன் வழங்குவதற்காக அறந்தாங்கி நகர் காவல் நிலையத்தில் பணிபுரிந்துவரும் காவலர் ராமராஜன் என்பவர் அக்னி பஜாருக்குச் சென்றுள்ளார். அப்போது சரவணனுக்கு சம்மன் வழங்கும்போது, சரவணன் அருகில் இருந்த துரைராஜ் என்பவருக்கும் காவலர் ராமராஜனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்திற்கு மேல் வாக்குவாதம் முற்றவே, லேசான கை கலப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்து அங்குவந்த காவல்துறையினர், காவலர் ராமராஜனை மீட்டு அறந்தாங்கி நகர காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். 

 

இதில், காவலர் தாக்கியதாக கூறி துரைராஜ், அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். காவலர் ராமராஜனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. காவலர் ராமராஜன், பணி நேரத்தில் மது போதையில் இருந்ததாக வியாபாரிகளும் பொதுமக்களும் குற்றஞ்சாட்டுகின்றனர். 

 

காவல்துறை தரப்பில் இதுகுறித்து, “சம்மன் வழங்குவதற்காக காவலர் ராமராஜன் சென்றார். ஆனால், சம்மந்தப்பட்ட நபர் சம்மனை வாங்க மறுத்துள்ளார். அதனால், காவலர் ராமராஜன் வலுக்கட்டாயமாக கொடுக்க முற்படும்போது அவரைப் பிடித்து வைத்து அடித்துள்ளனர். மேலும், மதுபானம் அருந்தியதாகச் சொல்லி அடித்துள்ளனர். அவருக்கு மதுபானம் அருந்தும் பழக்கம் கிடையாது. இருப்பினும் அவர் மது அருந்தியதாகச் சொல்லி அந்தக் காவலரை தாக்கியுள்ளனர்” என்று தெரிவித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்