Skip to main content

கல்விக் கட்டணம் தொடர்பான அனைத்து வழக்குகளும் 17- ஆம் தேதி விசாரிக்கப்படும்!- உயர்நீதிமன்றம்!

Published on 10/07/2020 | Edited on 10/07/2020

 

private schools fees chennai high court

தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணம் தொடர்பான அனைத்து வழக்குகளும் வருகிற 17- ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணங்களை வசூலிக்கக் கூடாது என்று தமிழக அரசு, கடந்த ஏப்ரல் 20- ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது. அதேசமயம், ஆசிரியர்கள் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரியும், அதற்குத் தடை விதிக்கக் கோரியும் அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்புகள் சார்பில் அதன் பொதுச் செயலாளர் பழனியப்பன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

 

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தவணை முறையில் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக அரசுக்குக் கோரிக்கை மனு அனுப்ப மனுதாரர் சங்கத்துக்கு அறிவுறுத்தியிருந்தது.

 

இந்த வழக்கில், தமிழக உயர்கல்வித் துறை தாக்கல் செய்த பதில் மனுவில், தனியார் கல்லூரிகள் ஆகஸ்ட், டிசம்பர் மற்றும் 2021 ஏப்ரல் மாதங்கள் என மூன்று தவணைகளாகக் கட்டணம் வசூலிக்க அனுமதிப்பது என முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பல்வேறு தரப்பினரும் வழக்குத் தொடர்ந்துள்ளதால் அனைத்து வழக்குகளும் வருகிற 17- ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று நீதிபதி அறிவித்துள்ளார்.

 


 

சார்ந்த செய்திகள்