கரூர் மாவட்டத்தில் உள்ள நெரூர் என்ற கிராமத்தில் சதாசிவ பிரம்மேந்திரரின் சமாதி உள்ளது. சதாசிவர் நினைவு நாளில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் ஒன்றுதான் எச்சில் இலையில் உருளும் சம்பிரதாயம்.
அக்ரகாரத்தில் பிராமணர்கள் சாப்பிட்டு போட்ட இலையில், பிற சாதியினரை உருள வைப்பதே இச்சடங்கு. இறைவனுக்கும் ஆன்மீகத்துக்கும், மனிதத் தன்மைக்கும், சுகாதாரத்துக்கும் எதிரான இச்சடங்கை கடந்த 2015 ஆம் ஆண்டு மதுரை உயர்நீதிமன்றம் தடை செய்தது.
தற்போது அதே சடங்கை மீண்டும் நடத்திக் கொள்ள மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவின் படி மே 18ஆம் தேதி எச்சிலை சடங்கு நடந்து முடிந்திருக்கிறது.
இது குறித்து அர்ச்சகர் சங்கம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “இறை, மத, ஆன்மீக நம்பிக்கைகள் வேறு. சடங்கு என்ற பெயரில் தமிழர்கள் மீது இழிவை சுமத்தி பார்ப்பன சாதி மேலாண்மையை நிறுவுவது என்பது வேறு. எந்த பக்தனும் சடங்கின் பெயரால் தன்னை இழிவுபடுத்திக் கொள்வதை எந்தக் கடவுளும் ஏற்காது. அரசியல் சட்டமும் ஆதரிக்காது. அரசியல் சட்டம் மனித மாண்பை காக்குமே தவிர தாழ்த்தாது. அரசியல் சட்ட காவலனாய் இருக்கும் உயர் நீதிமன்றம் - ஒரு மனிதன் தன்னைத் தானே இழிவு செய்து கொள்கிறேன், எச்சில் இலையில் புரள்கிறேன் - என்பதை மத உரிமையாக அங்கீகரித்து தீர்ப்பளித்து இருப்பது மிகுந்த அதிர்ச்சியை உண்டாக்குகிறது.
கர்நாடக அரசும் எச்சில் இலை சடங்கை தடை செய்திருக்கிறது. மூடநம்பிக்கைகளை வைத்துத்தான் பார்ப்பனர்கள் பன்னெடுங்காலமாக தங்கள் ஆன்மீக, சமூக மேலாண்மையை நிலைநாட்டிக் கொள்கின்றனர். பார்ப்பனர்கள் மேன்மையானவர்கள் புனிதர்கள், அவர்கள் சாப்பிட்ட எச்சில் நிலையில் உருண்டால் ஆன்ம பலம் கிடைக்கும் என்று நம்ப வைக்கும் தந்திரமே நெரூர் சடங்கு. சமத்துவத்தை வலியுறுத்தும் தமிழ் ஆன்மீக மரபுக்கு எதிராக, தொடர்ந்து செயல்படும் பார்ப்பன வைதீக ஆரிய ஆன்மீக மரபு, கோடிக்கணக்கான தமிழ் மக்களை தொடர்ந்து அடிமைத்தனத்தில் நிறுத்தி வைக்க முயலும் நரித்தனமே நெரூர் சடங்கு. நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று கடவுளையே கேள்வி எழுப்பிய சுயமரியாதை மரபு கொண்ட தமிழக பக்தர்கள் நெரூர் எச்சிலை சடங்கை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.
பக்தி இலக்கிய காலத்தில், அடிமைத்தனமாக வாழ்வதே லட்சியம் என்பதான கருத்து திட்டமிட்டு பார்ப்பனர்களால் உருவாக்கப்பட்டது. அதற்கு சூத்திர பஞ்சமர்கள் பயன்படுத்தப்பட்டார்கள். அந்த வரலாறு தான் மீண்டும் நிகழ்கிறது.
உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் தடை செய்த நிகழ்வை, ஒரு நீதிபதி மீண்டும் நடத்தச் சொல்லி உத்தரவிட முடியுமா? இரு நீதிபதியின் உத்தரவு பொதுநல வழக்கில் போடப்பட்டது. பொதுநல வழக்கின் உத்தரவு எல்லோரையும் கட்டுப்படுத்தும் தானே? நீதித்துறை மீதான தமிழக ஆன்மீகவாதிகளின் நன் மதிப்பை சீர்குலைக்கிறது இத்தீர்ப்பு. சதி எனும் உடன்கட்டை ஏறுதல், தேவதாசி முறை, பாலிய திருமணம், அனைத்து இந்துக்களும் அர்ச்சகராக மறுப்பு போன்ற வைதீகத்தின் பெயரிலான சமூக கொடுமைகளை தமிழ் ஆன்மீக உலகம் ஒருபோதும் ஏற்றதில்லை. வள்ளுவர், வைகுண்டர் முதல் வள்ளலார் வரை வலியுறுத்திய சமத்துவ ஆன்மீகத்தையே தமிழ் சமூகம் ஏற்றுக்கொள்ளும். அரசியல் சட்ட விரோத, ஆன்மீக விரோத, மனித குலத்துக்கு எதிரான மதுரை உயர்நீதிமன்ற கிளையின் தீர்ப்பை தமிழ் ஆன்மீக உலகின் சார்பில் நிராகரிக்கிறோம்.
ஏற்கனவே அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கு எதிராக உச்ச நீதிமன்றம் சென்று தடை வாங்கியுள்ள பார்ப்பனர்கள் தான், மனித மாண்புக்கு எதிரான இத்தீர்ப்பையும் ஆதரிக்கிறார்கள். எச்சிலை சடங்கையும் அதை ஆதரிக்கும் தீர்ப்பையும் தடுக்காவிட்டால் தமிழகம், உத்தரப்பிரதேசமாக மாறும்.
எனவே, தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு சமூகப் பாகுபாட்டை விதைக்கும் இத்தீர்ப்பை ரத்து செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.