Skip to main content

போலீஸ் தாக்கியதில் கால் டாக்ஸி ஓட்டுநர் உயிரிழப்பு; தலைமை காவலர் கைது

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Policeman arrested in case of Call Taxi driver case in Chennai

சென்னை மதுரவாயல் அருகே காவலர் தாக்கியதில் கால் டாக்ஸி ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

சென்னை சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் கால் டாக்ஸி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வானகரம் சர்வீஸ் சாலையில் ஒரு பெண்ணுடன் ராஜ்குமார் பேசிக் கொண்டு நின்றுள்ளார். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மதுரவாயல் காவல் நிலையத்தை சேர்ந்த தலைமை காவலர் ரிஸ்வான் ஓட்டுநர் ராஜ்குமாரிடம் விசாரித்துள்ளார்

அப்போது காவலர் ரிஸ்வானுக்கும் ஓட்டுநர் ராஜ்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்பு வாக்குவாதம் முற்றிய நிலையில் காவலர் ரிஸ்வான் ஓட்டுநர் ராஜ்குமாரின் நெஞ்சில் மிதத்தாக தெரிகிறது. இதில் சம்பவ இடத்திலேயே ராஜ்குமார் மயங்கி விழுந்துள்ளார். இதனைத் தொடர்ந்து ராஜ்குமாருடன் பேசிக்கொண்டிருந்த பெண் காவல் கட்டுபாட்டு அறைக்கு தொலைபேசியின் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார் மயங்கி விழுந்த ராஜ்குமாரை ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வைத்துள்ளனர். ஆனால், செல்லும் வழியிலேயே ஓட்டுநர் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.  ஆனால், ராஜ்குமார் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக கூறி போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் இருந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து உயிரிழந்த ராஜ்குமாரின் குடும்பத்தார் மதுரவாயல் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த நிலையில் மதுரவாயல் தலைமை காவலர் ரிஸ்வானை போலீசார் கைது செய்துள்ளனர். ஓட்டுநர் ராஜ்குமார் உயிரிழந்த விவகாரத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் துறை ரீதியாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில், காவலர் ரிஸ்வான் தாக்கியதால்தான் ஓட்டுநர் ராஜ்குமார் இறந்த்து தெரியவந்ததையடுத்து, தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்