Skip to main content

செஞ்சி அருகே பட்டப்பகலில் வீடுபுகுந்து கொள்ளை!

Published on 22/07/2020 | Edited on 22/07/2020
police investigating a theft near gingee

 

 

செஞ்சி அருகே வீட்டிலிருந்த சிறுமியை ஏமாற்றி, வீடு புகுந்து பீரோவை உடைத்து திருடிச் சென்றுள்ளார்.

 

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ளது அவலூர்பேட்டை காவல் நிலையம். இந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குந்தலம் பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி (55). இவர் கடந்த 19ம் தேதி குடும்பத்தினருடன் வயலுக்கு சென்று பணிகளில் ஈடுபட்டிருந்தார். அவரது வீட்டில் அவரது மகள் சினேகா (19) மட்டும் வீட்டில் இருந்துள்ளார்.

 

மதியம் சுமார் 12 மணி அளவில் அடையாளம் தெரியாத 25 வயது மதிக்கத்தக்க டிப்டாப் வாலிபர் ஒருவர் பைக்கில் அங்கு வந்துள்ளார். அவர் சினேகாவிடம் இந்த ஊரில் வேர்கடலை எங்கு கிடைக்கும் என்று கேட்டுள்ளார். அதற்கு சினேகா ‘அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆதனால் அங்கு இருக்கும் ரைஸ்மில்லில் போய் கேட்குமாறு’ அந்த இளைஞரிடம் கூறியுள்ளார். ஆனால் அந்த இளைஞரோ ‘சினேகாவிடம் நான் உங்கள் உறவினர்தான் எனக்கு விதைக்கு வேர்க்கடலை வேண்டும். ரைஸ்மில்லில் இருப்பவர்கள் பற்றி எனக்கு அறிமுகம் இல்லை. எனவே எனக்காக நீ அந்த ரைஸ் மில்லுக்கு சென்று வேர்கடலை பற்றிய விலை விவரம் கேட்டு வருமாறு’ கூறியுள்ளார்.

 

இளைஞர் தூரத்து உறவினர் என்று கூறியதை நம்பிய சினேகா அந்த ரைஸ் மில்லுக்கு விவரம் கேட்க சென்றுள்ளார். சினேகா ரைஸ்மில் சென்று திரும்பி வருவதற்குள் அந்த இளைஞன் வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த பீரோவை உடைத்து, அதனுள் இருந்த 18 சவரன் நகை மற்றும் 15,000 பணம் ஆகியவற்றை திருடிக் கொண்டு பைக்கில் பறந்து சென்று விட்டார். சினேகா ரைஸ்மில் சென்று திரும்பி வந்து பார்த்தபோது இளைஞர் மாயமாகி இருந்தார் சினேகா வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்தபணம் நகை திருடப்பட்டுள்ளது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

 

இதுகுறித்து வயலில் வேலை செய்து கொண்டிருந்த தந்தை சுப்பிரமணியனுக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர் உடனடியாக சென்று அவலுர்பேட்டை காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் கொடுத்துள்ளார். காவல்துறையினர் அவர் கொடுத்த புகார் மீது வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை தேடி வருகின்றனர். எப்படியெல்லாம் நூதன முறையில் கொள்ளையடிக்கும் வேலையில் இளைஞர்கள் கிளம்பியுள்ளனர் என்று பரபரப்பாக பேசிக்கொள்கிறார்கள் குந்தலம் பட்டு கிராம மக்கள்.

 

 

சார்ந்த செய்திகள்