Skip to main content

திருவண்ணாமலை டூ கேஜிஎப்; கொண்டையை மறந்த கொள்ளைக்காரர்கள் - கூண்டோடு தூக்கிய தமிழ்நாடு போலீஸ்

Published on 21/02/2023 | Edited on 21/02/2023

 

Police have arrested those involved in the Tiruvannamalai ATM robbery

 

திருவண்ணாமலை, கலசப்பாக்கம், போளூர் நகரில் 4 ஏ.டி.எம்களை உடைத்து 72.79 லட்ச ரூபாய் கொள்ளையடித்துச் சென்றது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. சாலைகள், பொது இடங்கள் என எல்லா இடத்திலும் சிசிடிவி கேமரா பாதுகாப்பில் உள்ள தமிழ்நாட்டில் ஏ.டி.எம் மையங்களில் புகுந்து கொள்ளையடித்துச் சென்றது பலமாநிலங்களை அதிர்ச்சியடையச் செய்தது. இந்த குற்றவாளிகளை எப்படி பிடிக்கப் போகிறார்கள் தமிழ்நாடு போலீசார் என்கிற கேள்வி எழுந்தது.

 

கொள்ளை சம்பவம் டிஜிபி சைலேந்திரபாபு கவனத்துக்குச் சென்றதும் வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில், வேலூர் சரக டிஐஜி முத்துசாமி மேற்பார்வையில் 5 எஸ்.பிக்கள் கொண்ட 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. திருவள்ளுவர் மாவட்ட எஸ்.பி. செபாஸ் கல்யாணம் ஆந்திரா மாநிலத்துக்கும், வேலூர் மாவட்ட எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் குஜராத் மாநிலத்துக்கும், திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி கார்த்திகேயன் ஹரியானா மாநிலத்துக்கும், திருப்பத்தூர் எஸ்.பி பாலகிருஷ்ணன் கர்நாடகா மாநிலத்துக்கும் விரைந்தனர். மாநில சைபர் க்ரைம் பிரிவில் பணியாற்றிய ராணிப்பேட்டை எஸ்.பி கிரண்ஸ்ருதி, சிசிடிவி, கைரேகை மற்றும் இதர மாநில போலீஸாருடன் தொடர்பில் இருந்து கண்காணித்து வந்தார்.

 

சந்தேகத்துக்கு உரிய செல்போன் நம்பர்களை பட்டியலெடுத்து அவற்றை ட்ரேஸ் செய்தனர். அதில் ஒரு நம்பர், கர்நாடகா மாநிலம் கோலார் லொக்கேஷனை காட்டியது. திருவண்ணாமலை டூ கோலார்க்கு நேரடி வழிகள் இருக்க, அந்த நம்பர் சித்தூர், நகரி, ராணிப்பேட்டை, ஆற்காடு, ஆரணி, போளுர், கலசப்பாக்கம் வழியாக திருவண்ணாமலைக்கு வந்திருந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அந்த நம்பருக்கு வந்த அனைத்து அழைப்புகளும் போலீசாரால் பின் தொடரப்பட்டது.

 

இதன்மூலமாக, கர்நாடகா மாநிலம் கே.ஜி.எப் நகரில் ஒரு லாட்ஜ்ஜில், கொள்ளையர்கள் தங்கியிருந்ததை போலீசார் உறுதி செய்தனர். கேஜிஎப் போலீஸ் சோர்ஸ் மூலமாக உறுதி செய்து கொண்டு நெருங்கிய போது, அந்த குற்றவாளிகள் தப்பிவிட்டனர். லாட்ஜ் உரிமையாளரை தூக்கிவந்து விசாரித்தனர். விசாரணையில் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த இந்திய அளவில் பிரபலமான மேவாட் மண்டலத்தை சேர்ந்த  கொள்ளையர்கள் இதில் ஈடுபட்டுள்ளது அம்பலமானது. திருவண்ணாமலை ஏ.டி.எம் கொள்ளை டீம்க்கு தலைவனாக இருந்தது, சோனரி கிராமத்தை சேர்ந்த முகமது ஆரிப் மற்றும்  அருகிலுள்ள புன்ஹானா மாவட்டத்தை சேர்ந்த ஆஜாத் எனவும் தகவல் கிடைத்தது.

 

திருவண்ணாமலை எஸ்.பி கார்த்திகேயன் தலைமையிலான டீம், ஹரியானா மாநிலத்துக்கு சென்றது. அம்மாநில போலிஸாரின் உதவியுடன் கொள்ளையர்களை பிடிக்க முடிவுசெய்தனர். கொள்ளை டீம் தலைவன் விமானம் வழியாக பெங்களுரூவில் இருந்து டெல்லி வந்திருப்பதை உறுதி செய்து அவனை ஃபாலோசெய்து அவன் கிராமத்தில் வைத்தே அவனை தூக்கிவந்துள்ளனர் தமிழ்நாடு போலீசார். கைதான இருவரிடமிருந்து 3 லட்ச ரூபாய் மட்டும் ரெக்கவரி செய்யப்பட்டுள்ளது.

 

கொள்ளையில் ஈடுப்பட்ட மற்றவர்கள், தங்களது சுமோவை கன்டெய்னர் லாரியில் ஏத்திக்கொண்டு சென்றுள்ளனர். அவர்களை குஜராத்தில் வைத்து வேலூர் எஸ்.பி ராஜேஷ்கண்ணா தலைமையிலான டீம் ஃபாலோ செய்து மடக்கியது. மேவாட் ரீஜீன் கொள்ளையர்கள் ஸ்கெட்ச் போடுவதில் படுகில்லாடிகள். பலமாநிலங்களில் இப்படி ஏ.டி.எம் இயந்திரங்களை உடைத்தும், மிஷினையே தூக்கிக்கொண்டும் சென்றுள்ளார்கள். இவர்களது பகுதியில் எந்த மாநில போலிஸாலும் இவர்களை நெருங்கவே முடியாது, இதனால் சில மாநில போலிஸார், ஏ.டி.எம் கொள்ளை வழக்குகளை முடிக்கமுடியாமல் திணறிவருகின்றனர். ஆனால், தமிழ்நாடு போலிஸ் சரியாக ஸ்கெட்ச் போட்டு அவர்களின் இடத்திலிருந்தே சென்று கொள்ளையர்களை கைதுசெய்து விமானம் வழியாக தமிழ்நாட்டுக்கு தூக்கிவந்து சிறையில் அடைத்துள்ளது.

 

தமிழ்நாடு போலீசின் இந்த துரித நடவைக்கையை கண்ட வடமாநில போலீசார் மூக்கில் விரல் வைத்துள்ளனராம்.

 

 

 

சார்ந்த செய்திகள்