அண்மைக்காலமாகவே 'மாஸ்' என்ற பெயரில் ஆயுதங்களுடன் இளைஞர்கள், மாணவர்கள் நடந்து வருவது, தாக்குவது, ஆபத்தான முறையில் வாகனங்களில் பயணம் செய்வது போன்ற ரீல்ஸ் வீடியோக்கள் வெளியாகி நடவடிக்கைகளுக்கு உள்ளாகி வருகிறது.
இந்நிலையில் இளைஞர் ஒருவர் நீர் நிலையில் மிகவும் ஆபத்தான முறையில் இன்ஸ்டா வீடியோ எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த இளைஞரையும் அதற்கு உதவியவர்களையும் கைது செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது. வைகை ஆற்றில் தண்ணீரில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து அந்த நெருப்புக்குள் குதித்து வீடியோ எடுத்து அதனை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் இளைஞர் ரீல்ஸாக வெளியிட்டுள்ளார். இதுதொடர்பான அந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரீல்ஸ் மோகத்தால் இது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வரும் நிலையில், இது ரீல்ஸ் எடுப்பவர்களின் உயிருக்கு கேடு விளைவிப்பதோடு மட்டுமல்லாது, நீர்நிலைகளில் பெட்ரோல் போன்ற பொருட்களை ஊற்றுவதால் நீர்நிலைகளும் மாசு அடையும். எனவே இதுபோன்ற நபர்கள் மீது உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இந்த வீடியோ போலீசாரின் கவனத்திற்கு சென்ற நிலையில் சம்பந்தப்பட்ட இளைஞர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இவர்கள் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள வைரவம் தருவைகுளத்தில் விபரீதமாக மண்ணுக்குள் குழிதோண்டி அதனுள் இளைஞரை தலைகீழாக புதைத்து சாகசம் செய்து அதை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாவில் பதிவிட்டது தெரியவந்தது. இது தொடர்பாக தீவிர நடவடிக்கை எடுத்த போலீசார் ரஞ்சித் பாலா அவரது நண்பர்கள் சிவக்குமார், இசக்கி, ராஜா ஆகியோர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தற்போது கைது செய்துள்ளனர். மேலும் இதுபோன்ற விபரீத செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.