Skip to main content

'இது என்ன நான்சென்ஸ் செயல்' - அதிகாரிகளை அலறவிட்ட மாவட்ட ஆட்சியர்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
nn

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட நிலையில், அங்கிருந்த காத்திருப்போர் அறையில் நோயாளிகளின் பயன்படுத்திய பழைய படுக்கைகள், கட்டில்கள் அடுக்கி இருப்பதைக் கண்டு அதிருப்தி அடைந்து அதிகாரிகளை கண்டித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாமக்கல் அரசு மருத்துவமனையில் நிழற்குடை அமைப்பதற்கான பூமி பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா கலந்து கொண்டார். பூஜையில் கலந்துகொண்ட கையோடு மருத்துவமனை வளாகத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் உறவினர்கள் காத்திருப்பதற்காக கட்டப்பட்ட காத்திருப்போர் அறை பூட்டப்பட்டிருந்தது. அதேபோல் அவர்களுக்கான கழிவறைகளும் பூட்டப்பட்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆட்சியர் உமா, அங்கிருந்த மருத்துவர்களிடம் கேள்வி எழுப்பியதோடு கண்டித்தார்.

'உங்களால் இதையெல்லாம் மெயின்டைன் பண்ண முடியாது என்றால் சொல்லி விடுங்கள். நான் மகளிர் சுய உதவி குழுவை வைத்து கட்டண கழிப்பிடமாக இதை நான் மாற்றி விடுகிறேன்' என கேட்டார். அதற்கு மருத்துவர்கள் இன்னும் டெண்டர் விடவில்லை என தெரிவித்தனர். அதற்கு மாவட்ட ஆட்சியர், டெண்டர் விடும்வரை நோயாளிகளின் உறவினர்கள் கழிவறைக்கு செல்லாமல் இருக்க முடியுமா? டெண்டர் விட்டால் தான் தலைவலியே. தேர்தல் வேலையை பார்ப்பதா டெண்டர் விடுவதா? என்று அதிருப்தி தெரிவித்தார்.

மீண்டும் இரவு செக் பண்ணுவதற்காக வருவேன் எல்லாவற்றையும் சரியாக வைத்திருக்க வேண்டும் என அங்கிருந்த அதிகாரிகளிடம் அதிரடியாக தெரிவித்துவிட்டு பிணவறை அருகே உள்ள காத்திருப்போர் அறைக்கு ஆட்சியர் சென்றார். ஆனால் அந்த கட்டிடம் பூட்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியானார். உறவினர்கள் என்னதான் சொன்னாலும் அந்த காத்திருப்போர் அறையில் இருக்காமல் வெளியே இருக்கின்றனர் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காத்திருப்போர் அறையில் இப்படி கட்டில்களை எல்லாம் போட்டு அடைத்து வைத்திருந்தால் எப்படி? தேவைக்கு அதிகமாக கட்டிலை வாங்கிவிட்டு பின்னர் காத்திருப்போர் அறையில் போட்டுவைப்பது என்ன நான்சென்ஸ் செயல் என கேள்வி எழுப்பி விட்டு சென்றார்.

சார்ந்த செய்திகள்