நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்ற தமிழக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் தொடங்கியது.
சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இன்று (08/02/2022) காலை 10.00 மணிக்கு சட்டமன்றத்தில் சிறப்புக் கூட்டம் தொடங்கியது. அப்போது, நீட் விலக்கு மசோதாவைத் திருப்பியனுப்பியது தொடர்பான ஆளுநரின் கடிதத்தை சட்டமன்றத்தில் சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, "உயர்மட்டக் குழுவின் அறிக்கை ஏற்கத்தக்கதாக இல்லை என ஆளுநர் கூறியுள்ளார். காமாலைக் கண்ணால் பார்ப்பது போன்று ஒரு தலைபட்சமான முறையில் குழுவின் அறிக்கை உள்ளது. உயிரியல், வேதியியல், இயற்பியலுக்கு மட்டுமே மாநில பாடத் திட்டம் முக்கியத்துவம் கொடுக்கிறது.
நீட் தேர்வால் அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர முடிகிறது. நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பு என்பதற்கு ஆதாரம் இல்லை. நீட் தேர்வு மட்டுமே மருத்துவப் படிப்புகளில் சமூக நீதியைக் காக்கிறது. ஆதாரமற்ற யூகங்களின் அடிப்படையில் உயர்மட்டக் குழுவின் அறிக்கை உள்ளது. நீட் தேர்வு முறையானதுதான்" என ஆளுநர் கூறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
"சபாநாயகருக்கு அனுப்பிய கடிதத்தை பொதுவெளியில் வெளியிட்டது உகந்ததா என சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும். எனது பொறுப்பிலிருந்து கடுகளவும் தவற மாட்டேன்" என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
இன்றைய சிறப்புக் கூட்டத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க., தி.மு.க., பா.ம.க., காங்கிரஸ், தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
தமிழக சட்டமன்றத்தில் 11 ஆண்டுகளில் 5ஆவது முறையாகச் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.