Skip to main content

நாமக்கல் அருகே லாரி & கார் நேருக்கு நேர் மோதி விபத்து! பீகார் வாலிபர்கள் உள்பட 6 பேர் பலி!

Published on 14/03/2020 | Edited on 14/03/2020

நாமக்கல் அருகே, நள்ளிரவு நேரத்தில் செங்கல் பாரம் ஏற்றிக்கொண்டு வந்த லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.

 

Namakkal incident - Larry & Car collision

 



நாமக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி செங்கல் பாரம் ஏற்றிக்கொண்டு, ஒரு லாரி நேற்று (மார்ச் 13) இரவு சென்று கொண்டிருந்தது. திருச்சி மாவட்டம் காட்டுப் புத்தூரில் இருந்து நாமக்கல் நோக்கி ஒரு கார் வேகமாக வந்து கொண்டிருந்தது. இரவு 11 மணியளவில், நாமக்கல் அருகே உள்ள சின்னவேப்பநத்தம் பகுதியில் வந்த கொண்டிருந்தபோது இரு வாகனங்களும் நேருக்குநேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. 

இந்த விபத்தில் கார் & லாரி இரண்டும் பலத்த சேதம் அடைந்தன. குறிப்பாக, காரின் முன்பக்கம் அப்பளம்போல் முற்றிலும் நொறுங்கியது. காரில் வந்த ஆறு பேரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட எஸ்பி அருளரசு, நாமக்கல் காவல் ஆய்வாளர் செல்வராஜ், தீயணைப்புப் படை வீரர்கள் ஆகியோர் சம்பவ இடம் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். லாரியின் முன்பக்கத்தின் அடிப்பகுதிக்குள் கார் சிக்கிக் கொண்டதால், இறந்தவர்களின் சடலங்களை மீட்பதில் சற்று தாமதம் ஏற்பட்டது. காரை கயிறு கட்டி வெளியே கொண்டு வந்தனர்.  

 



விசாரணையில், காரில் வந்திருந்த, நாமக்கல் மாவட்டம் வேட்டம்பாடியைச் சேர்ந்த சசிகுமார் (28), சதீஸ்குமார் (38), பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தர்மா (40), பப்லு (30), டேச்சான் குமார் (35), ஜிக்காந்திரன் (22) ஆகிய ஆறு பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்திருப்பது தெரிய வந்தது.

ஆறு பேரின் சடலங்களையும் மீட்ட காவல்துறையினர், உடற்கூறு ஆய்வுக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருச்சி பிரதான சாலையில் நடந்த இந்த விபத்தால் இரவு சுமார் இரண்டு மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அனைத்து வாகனங்களும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

விபத்தில் பலியான பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நான்கு பேரும், வேட்டம்பாடியில் தங்கியிருந்து புதிய கட்டடங்களுக்கு டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்தனர். நேற்று இவர்களுடன் சேர்ந்து வேட்டம்பாடியைச் சேர்ந்த 2 பேரும், திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூரில் உள்ள ஒரு வீட்டிற்கு டைல்ஸ் ஒட்டும் பணிக்குச் சென்றனர். வேலையை முடித்துக்கொண்டு ஊருக்குத் திரும்பியபோதுதான் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். காரும், லாரியும் அதிவேகமாக வந்ததால்தான் இந்த விபத்து நிகழ்ந்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த விபத்து குறித்து நாமக்கல் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவாகிவிட்ட லாரி ஓட்டுநரையும் தேடி வருகின்றனர்.


  

சார்ந்த செய்திகள்