சமூகவலைதளங்களில் ஒன்றிய அரசின் புதிய விதிகளை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் கர்நாடக இசைக்கலைஞர் டி.எம். கிருஷ்ணா வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஒன்றிய அரசு கடந்த பிப்ரவரி மாதம் தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் சில திருத்தங்களைக் கொண்டு வந்து புதிய விதிகளை அறிவித்தது. அதில் முக்கியமாக இந்தியப் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு எதிரான தகவல்கள் சமூகவலைதளங்களில் பகிரப்படுகிறது. எனவே அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன், இந்தப் பதிவுகளை யார் பதிவிடுகிறார்களோ அவர்களுடைய விவரங்களை அரசு கேட்டால் கொடுக்க வேண்டும் என சமூக வலைதளங்களுக்கு விதிகள் உருவாக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மத்திய அரசின் புதிய விதிகளை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் கர்நாடக இசைக்கலைஞர் டி.எம். கிருஷ்ணா வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், ''தனியுரிமை, விருப்பப்படி கிடைக்கும்போதுதான் தன்னைப் போன்ற ஒருவன் கலைஞனாக மட்டுமல்லாமல் மனிதனாகவும் உணர முடியும். ஒரு இசைக்கலைஞன் என்ற அடிப்படையில் தன்னுடைய உரிமைகளைப் பறிக்கும் வகையில் இந்த விதிகள் உருவாக்கப்பட்டுள்ளது. கருத்துரிமை, தனிநபர் ரகசிய காப்புரிமை இருந்தால்தான் ஒரு கலைஞனாக மட்டுமல்லாமல் மனிதனாகவும் உணர முடியும். எனவே இந்த விதிகள் இடையூறாக இருக்கிறது. அரசியலமைப்பில் வழங்கப்பட்ட கற்பனை சுதந்திரத்தைத் தணிக்கை செய்யும் விதமாக புதிய விதிகள் உள்ளன. கருத்துரிமை, தனியுரிமை ஆகியவை விருப்பப்படி சுதந்திரமாக கண்ணியத்துடன் கிடைக்க வேண்டும்” எனவும் அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் மூன்று வாரங்களில் ஒன்றிய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.