ராமநாதபுரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மஸ்கட்டில் வீட்டு வேலை பணிக்காக சென்ற நிலையில் அவர் அங்கு அடிமைபோல நடத்தப்பட்டு உணவுவின்றி தவித்து வருவதாக வெளியாகியுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் மஸ்கட்டில் சிக்கித் தவிக்கும் பெண்ணின் மகள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாயை மீட்டுத் தரும்படி கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் ஏ.புனவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் பத்ரகாளி. ராமநாதபுரத்தில் வீட்டு வேலைகள் செய்து வாழ்ந்து வந்த பத்திரகாளி தனக்கு ஏற்பட்ட கடன் பிரச்சனை காரணமாக வெளிநாட்டிற்கு பணிப்பெண்ணாக வேலைக்குச் செல்ல திட்டமிட்டார். அதன்படி கடந்த ஆண்டு மஸ்கட்டுக்குச் சென்று வேலை பார்த்து வந்துள்ளார். சில மாதங்கள் மட்டும் முறையாக அவருக்கு உணவும் ஊதியமும் வழங்கப்பட்ட நிலையில் நாட்கள் செல்லச் செல்ல ஊதியத்தையும் அவருக்கான உணவையும் கொடுக்க மறுத்து ஆடு ஜீவிதம் படத்தில் வருவதைப் போல சித்திரவதைக்கு ஆளாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பத்ரகாளியின் மகள் நபிலா ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் முன்பு நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தில் தன்னுடைய தாயை மீட்டு தரும்படி கோரிக்கை வைத்தார். மஸ்கட்டில் சிக்கியுள்ள பத்ரகாளி பேசும் வீடியோ ஒன்றும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், ''என்ன வார்த்தை சொல்கிறார்கள் என்று கூட எனக்குத் தெரிய மாட்டேங்குது ஐயா. என்னை அடைத்து போட்டிருக்காங்க. என்னை கூட்டிட்டு போயிருங்க. இந்தியாவுக்கு கூட்டிட்டு போயிருங்க ஐயா'' என கோரிக்கை வைக்கும் வீடியோ பரவி வருகிறது.
தன்னுடைய தாயை திருப்பி அனுப்பி விடும்படி எதிர்த்துக் கேட்டால் அவரை கொடுமைப்படுத்துவதாகவும், உணவை கேட்டால் வயிற்றிலேயே எட்டி மிதிப்பதாகவும் அவருடைய மகள் நபிலா தெரிவித்துள்ளார். அதேபோல் இங்கிருந்து செல்லும்போது பத்திரகாளி எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் தற்பொழுது அவர் இருக்கும் புகைப்படத்தையும் ஒப்பிட்டு உடல் பருமனுடன் இருந்த தாய் இப்பொழுது எப்படி இருக்கிறார் என்று பாருங்கள் எனக் கண்ணீர் விட்டு அழுதார்.