சென்னையில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்பனை தொடங்கியுள்ள நிலையில், பலரும் முண்டியடித்துகொண்டு டிக்கெட்டுகளை வாங்கி வருகின்றனர். இந்த நிலையில் தாய்மார்கள் பலரும் டிக்கெட்டுகள் வாங்க முயன்ற பொழுது, தாய் ஒருவர் பச்சிளம் குழந்தையை தவிக்க விட்டு விட்டு டிக்கெட் வாங்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி நாளை மறுநாள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதற்காக பலரும் ஐபிஎல் டிக்கெட்டுகளை வாங்குவதற்காக முண்டியடித்துக்கொண்டு வரிசையில் நின்று வருகின்றனர். நள்ளிரவு முதலே ஏராளமானோர் டிக்கெட்டுகளை வாங்க குவிந்தனர். பெண்கள் பலரும் டிக்கெட்டுகளை வாங்க குவிந்த நிலையில், டிக்கெட் வாங்க வந்த பெண் ஒருவர் கைக்குழந்தை ஒன்றை மூதாட்டி ஒருவரிடம் கொடுத்துவிட்டு டிக்கெட் வாங்கச் சென்றுள்ளார்.
நீண்ட நேரம் ஆகியும் தாய் வராததால் குழந்தை அழ ஆரம்பித்தது. உடனடியாக அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் மூதாட்டி இதனைத் தெரிவிக்க, குழந்தையைப் பெற்றுக் கொண்ட போலீசார் ஒலிபெருக்கி மூலம் குழந்தையின் தாயாரை அழைத்தனர். குழந்தைகளை விட்டுச் சென்ற அந்த பெண் போலீசாரரை நோக்கி வந்த நிலையில் அவரை கடுமையாக எச்சரித்த போலீசார் குழந்தையை தாயுடன் அனுப்பி வைத்தனர். நள்ளிரவில் நிகழ்ந்த இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.