Skip to main content

பிரசவத்தில் தாய்க்கும் சேய்க்கும் நேர்ந்த சோகம்... மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்..!

Published on 02/11/2020 | Edited on 02/11/2020

 

mother and new born baby passes away


கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகில் உள்ளது பாசார் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் 25 வயது அயல்துறை. இவர் சென்னையிலுள்ள ஒரு அரிசி மாவு பாக்கெட் கம்பெனியில் விற்பனையாளராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கற்பகம் வயது 21 பி.எஸ்.சி. நர்சிங் படித்துள்ளார். 
 

நிறைமாத கர்ப்பிணியான கற்பகம், இரண்டு மாதங்களுக்கு முன் தியாகதுருகம் அடுத்துள்ள நின்னையூர் கிராமத்தில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார். நேற்று முன்தினம் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது பெற்றோர் உடனடியாக தியாகதுருகத்தில் உள்ள 24 மணி நேர அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொண்டுவந்து பிரசவத்திற்காக சேர்த்துள்ளனர். அன்று  மாலையில் இறந்த நிலையில் கற்பகத்துக்கு குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து கற்பகம் உடல்நிலை மிகவும் மோசமானதால் அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். 
 

அங்கு சிகிச்சை பலனின்றி அன்று இரவே கற்பகமும் இறந்து போய்விட்டார். இதனால் ஆத்திரமடைந்த கற்பகத்தின் உறவினர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையின் முன்பு நேற்று காலை 11 மணி அளவில் முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் தியாகதுருகம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முறையான சிகிச்சை அளிக்காததே  குழந்தையும் தாயும் இறப்புக்கு காரணம் என்று கூறி வாதிட்டனர். 
 


அது சம்பந்தமான டாக்டர், செவிலியர்களை  பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டி.எஸ்.பி. இராமநாதன், இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  அதையடுத்து சுகாதாரப்பணிகள் இயக்குனர் சதீஷ் குமார் டாக்டர் பழமலை ஆகியோர் பாதிக்கப்பட்ட கற்பகம் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பணியில் இருந்த டாக்டர் மற்றும் சுகாதார செவிலியர்களிடம் உரிய விசாரணை நடத்தப்பட்டு   நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதையடுத்து போராட்டத்தை கைவிட்டு  கற்பகம் மற்றும் அவரது குழந்தையின் உடலை அடக்கம் செய்ய எடுத்துச் சென்றுள்ளனர்.  பிரசவத்திற்கு வந்த தாயும்  குழந்தையும் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து இறந்த சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அரசு மருத்துவர்கள் செவிலியர்கள் அலட்சியப் போக்கே தாயும் குழந்தையும் இழப்பதற்கு காரணம் என்று அவர்களது உறவினர்களும் பொதுமக்களும் குற்றம் சாட்டுகிறார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்