
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவுறுத்தல் படி இன்று தமிழகத்தில் நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தென்காசி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பான இடங்களில் மக்கள் தங்க வைக்கப்படுவதுடன், அவர்களுடைய அரசு ஆவணங்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை பத்திரமாக வைத்துக் கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
இன்று (11ம் தேதி) தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை எச்சரிக்கை காரணமாக கன்னியாகுமரியில் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வட தமிழகத்தில் புதுவை, காரைக்கால் வரை மிதமான மழை பெய்யக்கூடும். இன்றும் நாளையும் தென் தமிழகம் முழுவதும் மேகக் கூட்டங்கள் நிறைந்து காணப்படும். எனவே பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் பரவலாக பல இடங்களில் மழை பொழிந்து வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பூர், குன்னம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னையின் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்தது. சென்னை பாடி.,அம்பத்தூர், கொரட்டூர், உள்ளிட்ட பகுதிகளிலும் அதேபோல் குன்றத்தூர், திருமுல்லைவாயில், ஸ்ரீபெரும்புதூர் பூந்தமல்லி வெளியிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பொழிந்தது.