Skip to main content

இருவரும் நல்லவர் என்று சொன்னால் நீங்கள் அனைவரும் சிரிப்பீர்கள்: ஸ்டாலின் பேச்சு

Published on 05/02/2019 | Edited on 05/02/2019
mkstalin



திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், சிவகங்கை மாவட்டம் கீழடி ஊராட்சியில் இன்று (05-02-2019) நடைபெற்ற தி.மு.க ஊராட்சி சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். பின்னர், கழகத் தலைவர் அவர்களிடத்தில் அங்கு கூடியிருந்த மக்கள் தங்கள் குறைகளை கோரிக்கைகளாக தெரிவித்தனர். 
 

அதன்பிறகு பேசிய ஸ்டாலின்,
 

எதற்காக இந்தக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது என்பதை நீங்களும் சரியாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள். அதற்கேற்ற வகையில் உங்கள் பிரச்னைகள் எல்லாவற்றையும் எடுத்துச் சொல்லி இருக்கிறீர்கள். உங்களுக்கு இருக்கும் ஆர்வத்தையும், உற்சாகத்தையும் பார்க்கின்ற பொழுது 30 பேர் பேசட்டும் என்று நானும் சம்மதித்தேன். பிறரை பேசவிடவில்லை என்று தவறாக நினைத்துக்கொள்ள வேண்டாம். அதுமட்டுமல்லாமல் நீங்களும் பல வேலைகளை விட்டுவிட்டு வந்திருக்கின்றீர்கள். கூடுமானவரையில் நீங்கள் சொன்ன பிரச்னைகள் அனைத்தையும் சுருக்கமாக நான் குறித்து வைத்துள்ளேன். நிச்சயம் அதற்கு தீர்வு காண்பேன். அதேபோல் தேவேந்திர குல சமுதாயத்தைச் சார்ந்த சகோதரி ஒரு கோரிக்கை வைத்தார். அதாவது, பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தார். நேற்றைக்குக் கூட அந்த சமுதாயத்தைச் சார்ந்த தலைவர்கள் என்னை வந்து சந்தித்தார்கள். பல பிரச்னைகளை என்னிடத்தில் எடுத்துச் சொல்லி இருக்கின்றார்கள். அவை அனைத்தையும் நிச்சயமாக திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வருகின்றபொழுது நிறைவேற்றித் தரப்படும். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மட்டுமல்ல, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மட்டுமல்ல, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமல்ல, அருந்ததியர் சமுதாயத்திற்கும் திராவிட முன்னேற்றக் கழகம் தான் உள் ஒதுக்கீடு வாங்கிக் கொடுத்துள்ளது என்பது உங்களுக்கு தெரியும். அதுபோல் அனைத்து சமுதாய மக்களுக்கும் கலைஞர் ஆட்சியில் இருந்தபொழுது பல நன்மைகள் செய்து கொடுத்துள்ளார். எனவே, மீண்டும் தி.மு.க ஆட்சிக்கு வருகின்ற பொழுது நீங்கள் வைத்த கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றப்படும் என்ற அந்த உறுதியை நான் தருகின்றேன். வேலைவாய்ப்பு பிரச்னை ஒரு தீராத பிரச்னையாக இருந்து கொண்டிருக்கின்றது. எனவே அந்தப் பிரச்னையைப் பற்றிச் சொல்லி இருக்கின்றீர்கள். அதற்காக ஒரு தொழிற்சாலை வந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லியிருக்கிறீர்கள். நிச்சயம் தி.மு.கழக ஆட்சியில் இவையனைத்தும் நிறைவேற்றப்படும்.
 

அதேபோல் சுய உதவிக் குழுக்களைப் பற்றிச் சொன்னீர்கள். 1989ல் தி.மு.க ஆட்சியில் தான் மகளிர் சுய உதவிக் குழுவை ஆரம்பித்தோம். அப்படிப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு இப்பொழுது ஒரு அனாதையாக கேள்வி கேட்க ஆளில்லாமல் இருக்கின்றது. மகளிர் சுய உதவிக் குழுவில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு ‘மணிமேகலை விருது கொடுத்தோம்’ ‘வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தை’ அதன் மூலம் ஏற்படுத்திக் கொடுத்தோம். ஆனால், இப்போது இவையெல்லாம் என்ன நிலையில் இருக்கிறது என்பது உங்களுக்கு நன்றாக தெரியும்.
 

மத்தியிலே ஆட்சி செய்கின்ற மோடி சொல்லி இருக்கின்றார். தற்போது வெளியிட்டுள்ள இந்த பட்ஜெட் ஒரு ட்ரெய்லர். இப்பொழுதுதான் ட்ரெய்லர் வந்திருக்கின்றதாம். ட்ரெய்லர் என்பது பற்றி உங்கள் எல்லோருக்கும் தெரியும். ஒரு திரைப்படம் வெளியாவதற்கு முன்பு ஒரு ட்ரெய்லர் வெளியிடுவார்கள். அதைப் பார்த்து விட்டு அனைவரும் சென்று சினிமா பார்ப்பார்கள். அதுபோல் சொல்கின்றார் மோடி. எனவே, ஒரு ட்ரெய்லர் தயாரிக்கவே 5 வருடம் ஆகிறது என்றால், மக்களுக்கான திட்டங்கள் தீட்டுவதற்கு, அதனை செயல்படுத்துவதற்கு எத்தனை காலம் ஆகும் என்று நீங்கள் உணர்ந்து பார்க்க வேண்டும் என்பதைத்தான் நான் இங்கு குறிப்பிட்டுக் காட்ட விரும்புகின்றேன்.


 

mkstalin



எடப்பாடி பழனிசாமி ஆட்சி இங்கு நடந்துகொண்டிருக்கிறது. இருவரும் நல்லவர் என்று சொன்னால் நீங்கள் அனைவரும் சிரிப்பீர்கள். காரணம் அந்த அளவிற்கு ஒரு அசிங்கமான முறையில் ஒரு ஆட்சியை இருவரும் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
 

ஜெயலலிதா இறந்த காரணத்தினால் ஒரு விபத்தாக எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக அமர்ந்தார். நான் நடந்த செய்தியைத்தான் சொல்கின்றேன். அந்த அளவிற்கு ஒரு மர்மமான முறையில் ஜெயலலிதா எப்படி இறந்தார் என்பதற்காக ஒரு விசாரணை கமிஷன் நடந்து கொண்டிருக்கிறது. அதுவும் எந்த நிலையில் சென்று கொண்டிருக்கிறது என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். கொள்ளை செய்தது போதாதென்று கொலை செய்யத் துணிந்திருக்கின்ற ஆட்சி தான் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க ஆட்சி. எனவே இப்படிப்பட்ட இந்த ஆட்சிக்கு முட்டுக் கொடுக்கும் வேலையை மத்தியிலிருந்து மோடி அவர்கள் செய்து கொண்டிருக்கின்றார். ஆகவே, இந்த ஆட்சிகளை அடியோடு ஒழிப்பதற்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கின்றது. எனவே, அந்த வாய்ப்பை நீங்கள் அனைவரும் பயன்படுத்திக்கொண்டு வருகின்ற தேர்தலில் ஒரு நல்ல தீர்ப்பை நீங்கள் எல்லோரும் வழங்குவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.
 

நான் துவக்கத்திலேயே உங்களிடத்தில் குறிப்பிட்டுக் காட்டியதுபோல் கீழடி அகழாய்வு பிரச்னையைப் பொறுத்தவரையில் அதனை முறையாக ஆய்வு நடத்தி, அறிக்கை தயாரித்து இங்கு அருங்காட்சியமாக வைத்தால் தான் இங்கு நிறைய பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த ஊருக்கு பெருமை வந்து சேரும், இந்த ஊருக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் பெருமை வந்து சேரப்போகின்றது. தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல உலகமெங்கும் இருக்கக்கூடிய தமிழர்களுக்கு இந்தப் பெருமை கிடைக்கப்போகின்றது. அந்தப் பணியை நிச்சயமாக நிறைவேற்ற நான் காத்திருக்கின்றேன். இவ்வாறு பேசினார். 
 


 

சார்ந்த செய்திகள்