Skip to main content

வருமானவரித்துறை சோதனை குறித்து அமைச்சர் எ.வ. வேலு விளக்கம்

Published on 07/11/2023 | Edited on 07/11/2023

 

Minister's explanation on income tax audit

 

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலுக்குச் சொந்தமான இடங்களில் ஐந்து நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். திருவண்ணாமலையில் உள்ள அமைச்சர் எ.வ. வேலுவின் வீடு, கல்லூரி ஆகிய இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. சென்னையில் அசோக் நகர், தியாகராய நகர், கீழ்பாக்கம், வேப்பேரி பகுதிகளிலும், அருணை பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, மகளிர் கலைக்கல்லூரி பாலிடெக்னிக் மற்றும் பன்னாட்டு பள்ளி என 40 இடங்களில் சோதனை நடைபெற்றது.

 

இந்நிலையில் அமைச்சர் எ.வ.வேலு திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் இது குறித்து பேசுகையில், “எனது நேர்முக உதவியாளரிடம் வருமான வரித்துறையினர் கண்ணீர் விட்டு அழும் அளவிற்கு அச்சுறுத்தும் வகையில் கேள்விகளை எழுப்பினர். ஓட்டுநரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினர். எனது மனைவி, மகன்களிடம் வருமான வரித்துறையினர் மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் கேள்விகளை எழுப்பினர். வருமான வரித்துறையினர் மேல் கோபம் வரவில்லை. ஏன் தெரியுமா, இவர்கள் அம்புதான். ஆனால் அம்பை எய்தவர்கள் எங்கேயோ இருக்கிறார்கள். என் பெயரில் நேரடியாக 48.33 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது. எந்த அறக்கட்டளையிலும் நான் பொறுப்பில் இல்லை.

 

கடந்த 2006 - 2011 ஆம் ஆண்டு உணவுத்துறை அமைச்சராக நான் சிறப்பாக பணியாற்றினேன். எனக்கு எதிராக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நான் வெளிநாட்டுக்காரன் இல்லை, இந்த மண்ணுக்கு சொந்தக்காரன். அடிப்படையில் விவசாயியின் வீட்டு பிள்ளை என்பது அத்தனை பேருக்கும் தெரியும். வருமான வரித்துறையினர் சோதனைக்கு நாங்கள் யாரும் அஞ்ச மாட்டோம். எங்களை பொறுத்தவரை நாங்கள் சட்டப்படி நடந்துகொள்வோம். எங்களை முடக்குவதற்காகவே வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது. எனக்கு தொடர்புடைய இடங்களில் ஒரு பைசா கூட பறிமுதல் செய்யவில்லை. ஏற்கனவே 2 நாள் என் வீட்டில் ரெய்டு நடத்தியதால் 2 நாட்கள் என் பணிகளை செய்ய முடியவில்லை.

 

பாஜக கட்சியில் வருமான வரித்துறையும் ஒரு அணியாக மாறிவிட்டது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொன்னது போல பாஜகவில் ஒரு அணியாக வருமான வரித்துறை உள்ளது. எங்களை முடக்குவதற்காகவே இந்த சோதனை நடைபெற்றது. எனக்கும் காசா கிராண்ட், அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்னை பொறுத்தவரை நான் நேர்மையானவனாக, எனது மனசாட்சிக்கு பயந்தவனாக எப்போதும் கட்டுப்பட்டு இருக்கிறேன்” என தெரிவித்தார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பத்திர முறைகேடு; எஸ்.ஐ.டி. விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Electoral bond SIT A case in the Supreme Court for investigation

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2018ஆம் ஆண்டு தேர்தல் பத்திரம் திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தின் மூலம், தனிநபர் அல்லது கார்ப்பரேட் நிறுவனங்கள், வங்கி மூலம் தேர்தல் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளலாம். இந்தத் தேர்தல் பத்திரங்களில் வாங்குபவரின் பெயர், முகவரி, இந்த நிதி யாரிடம் இருந்து பெறப்பட்டது ஆகிய விவரங்கள் மற்றவர்களுக்குத் தெரியாது என்றும் கூறப்பட்டது. அந்த தனிநபரோ அல்லது கார்ப்பரேட் நிறுவனமோ இந்த பத்திரங்களை கொண்டு தங்களுக்கு விருப்பமான கட்சிகளுக்குத் தேர்தல் நிதியாக வழங்கலாம். மேலும், அந்த கட்சிகள் 15 நாட்களுக்குள் எந்தவித கட்டுப்பாடுமின்றி இதனை நிதியாக மாற்றிக் கொள்ளலாம். அப்படி இல்லையென்றால், அந்தத் தேர்தல் பத்திரத் தொகை பிரதமர் நிவாரண நிதியில் டெபாசிட் செய்யப்படும் என்று அந்தத் திட்டத்தில் கூறப்பட்டது.

இந்தத் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இதையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதியைப் பெறுவது என்ற திட்டத்தை எதிர்த்து ஏடிஆர், காமன் கேஸ் உள்ளிட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மார்க்சிஸ்ட் சார்பில் உச்சநீதிமன்றத்தில் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி (15.02.2024) தேர்தல் பத்திரம் திட்டம் சட்டவிரோதம் என தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில் தேர்தல் பத்திர முறைகேடுகள் குறித்து சிறப்பு புலானாய்வு குழு (S.I.T. - Special Investigation Team) அமைத்து விசாரணை நடத்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யபட்டுள்ளது. பொதுநல வழக்குகள் மற்றும் பொதுநலன் ஆகிய அமைப்புகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில், “அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை விசாரணையில் சிக்கிய பல நிறுவனஙகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி அளித்துள்ளதால் விரிவான விசாரணை தேவை. முக்கிய விசாரணை அமைப்புகளான சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவை ஊழலுக்கு துணை போயிருக்கின்றன. எனவே இது தொடர்பாக சிறப்பு புலானாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

'பெயரே சொல்லி அழைக்க தானே'- அமைச்சரின் பதிலால் தலைகுனிந்த அலுவலர்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'Just call me by name' - the minister the minister's reply

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

முன்னதாக திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சே.கூடலூர் கிராமத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். அப்போது அவரது பெயரை வாக்குச்சாவடியில் அமர்ந்திருந்த அலுவலர் ஜெயராணி, ஓட்டு போடுபவர் யார் என்பதை அங்குள்ள பூத் ஏஜன்ட்கள் தெரிந்துக்கொண்டு தங்களிடம் உள்ள பட்டியலில் குறித்துக் கொள்வதற்காக பெயரை குறிப்பிடுவார். அதன்படி வாக்களிக்க வந்த அமைச்சர் வேலுவின் பெயரை சத்தமாக கூறினார். உள்ளே அமர்ந்திருந்த வாக்குசாவடி முகவர்கள் அனைவரும் குறித்துக் கொண்டனர். அமைச்சர் வேலுவும் ஸ்லீப்பில் கையெழுத்து போட்டுவிட்டு, விரலில் மை வைத்துக் கொண்டு நேரடியாக சென்று வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனது வாக்கினை செலுத்தினார்.

அப்போது அங்கிருந்த மற்றொரு அலுவலர், அந்த பெண் அதிகாரியிடம் அமைச்சரை பெயர் சொல்லி அழைத்ததை அவர் தவறாக எடுத்துக்கொள்வார், அவரிடம் சாரி கேளுங்க என திரும்ப திரும்ப வலியுறுத்தினார். பயந்துபோன அந்த பெண் அலுவலரும் ஓட்டு போட்டுவிட்டு வந்த அமைச்சரிடம் சென்று,  சாரி சார் என்றார். அமைச்சர் எதுவும் புரியாமல், ஏன் என கேட்டபோது, உங்கள் பெயரைச் சொல்லி குறிப்பிட்டதும், நீங்கள் தேர்தல் அலுவலர் உங்களது பணியை நீங்கள் செய்கிறீர்கள், பெயர் என்பது அழைப்பதற்காக தானே இதில் என்ன இருக்கிறது? இதற்கு எதற்கு நீங்கள் சாரி கேட்கிறீர்கள் அதெல்லாம் தேவையில்லையம்மா என கூறிவிட்டு சென்றார்.

சாரி கேட்கச் சொன்ன அந்த வருவாய்த்துறை அலுவலர் தலை குனிந்தபடி அங்கிருந்து நகர்ந்துவிட்டார். அந்த பெண் அலுவலர் பெருமிதமாக அமர்ந்து பணியை செய்யத் தொடங்கினார். 

 

படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்.