Skip to main content

ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு கலை கல்லூரிக்கு ஆண்டாள் பெயர்!- கோரிக்கையை அரசு பரிசீலிக்கும் என்கிறார் கே.டி.ராஜேந்திரபாலாஜி!

Published on 22/09/2020 | Edited on 22/09/2020

 

minister rajendra balaji press meet at srivillipudhur

 

திருவில்லிபுத்தூரில், அரசு கலை கல்லூரியில் மாணவர் சேர்க்கையைத் தொடங்கி வைத்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

 

“ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு கலை கல்லூரி அமைய வேண்டும் என்பது திருவில்லிபுத்தூர் தொகுதி மக்களின் நூறாண்டு கனவாகும். விவசாயிகள், பட்டாசு தொழிலாளர்கள், நெசவுத் தொழிலாளர்கள் என உழைக்கின்ற மக்கள் வாழ்கின்ற பகுதி, இந்த சட்டமன்ற தொகுதியாகும். இங்கு அரசு கலை கல்லூரி வேண்டுமென்று, இந்த தொகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்துள்ளனர். ஆனால், அதை நிறைவேற்றியது அம்மாவுடைய அரசான, எடப்பாடியார் அரசுதான்.

 

திருவில்லிபுத்தூரில் அரசு கலை கல்லூரி தொடங்கப்படும் என்று 15 தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் எடப்பாடியார் அறிவித்தார். உடனடியாக கல்லூரி முதல்வரையும் நியமித்தார். நடப்பாண்டு சேர்க்கைக்கும் உத்தரவிட்டுள்ளார்.  இந்த நடப்பாண்டில் மட்டும் 7 அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில், அம்மாவுடைய அரசு தமிழகத்தில் ஏராளமான அரசு கலைக்கல்லூரிகளைத் தொடங்கியுள்ளது.

 

minister rajendra balaji press meet at srivillipudhur

 

ஆண்டாள் அவதரித்த புண்ணிய பூமியான திருவில்லிபுத்தூரில் தற்போது அரசு கலை கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஊரில், பல்கலைக்கழகம், தனியார் கல்லூரிகள் உள்ளன. ஆனால், ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், இங்கு அரசு கல்லூரியை தமிழக அரசு அமைத்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் சி.எம்.எஸ். பள்ளியில், அரசு கல்லூரி தற்காலிகமாக செயல்படும். விருதுநகர் மாவட்டத்திற்கு மருத்துவ கல்லூரி வரவே வராது என்றார்கள். தற்போது, ரூ.350 கோடியில் மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் மருத்துவக் கல்லூரியை,  தமிழக முதல்வர் எடப்பாடியார் திறந்து வைப்பார்.

 

திருவில்லிபுத்தூர் தொகுதி மக்களின்  இரண்டு கோரிக்கைகள் முக்கியமானவை ஆகும். அவை வத்திராயிருப்பை தலைமையிடமாகக்கொண்டு  தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும்; திருவில்லிபுத்தூரில் அரசு கலை கல்லூரி தொடங்க வேண்டும் என்பதாகும். இந்த இரண்டு கோரிக்கைகளுக்காகவும், சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா, தொடர்ந்து சட்டமன்றத்தில் குரல் எழுப்பினார். அந்த இரண்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

இந்த கல்லூரியை, பல்கலைக்கழகம் அளவிற்கு தரம் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அரசு கலை கல்லூரி தொடங்கப்பட்டதன் மூலம், கிராமப்புற மாணவர்களின் உயர்கல்வி கனவு நிறைவேறும். 1500 ரூபாய் ஆண்டு கட்டணத்தில்,  இந்த கல்லூரியில் ஏழை, எளிய மாணவர்கள் படிக்கலாம். 5 பிரிவுகளுடன் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, கூடுதல் பிரிவுகள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த அரசு கலை கல்லூரிக்கு பத்து ஏக்கர் நிலப்பரப்பில் புதிய கட்டிடம் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கப்படும். அரசு கலை கல்லூரிக்கு ஆண்டாள் பெயர் வைக்க வேண்டும் என்று சந்திரபிரபா எம்எல்ஏ மூலம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அந்த கோரிக்கையை,  தமிழக அரசு பரிசீலனை செய்யும்.

 

வேளாண் மசோதா சட்டத்தில், தமிழக முதல்வர் மீது குறை கூற  ஸ்டாலினுக்கு தகுதி கிடையாது. ஸ்டாலின் என்பதே, தமிழ் பெயர் கிடையாது. ஸ்டாலின் என்பது ரஷ்ய அதிபரின் பெயராகும். ஸ்டாலின் பெயர் கொண்ட இவர்,  தமிழக முதல்வரை விமர்சிக்க தகுதி கிடையாது. வேளாண் மசோதாவில் தவறு இருந்தால், தமிழக முதல்வர் கண்டிப்பாக சுட்டி காண்பிப்பார். தமிழக முதல்வர் எதைச்செய்தாலும், குறை சொல்வதையே ஸ்டாலின் குறிக்கோளாக வைத்துள்ளார். மத்திய அரசையும், மாநில அரசையும் குறை சொல்லியே பிழைப்பு நடத்தும் ஸ்டாலினின் அரசியல் கனவு பலிக்காது.

 

தமிழகத்தி்ல் இருமொழிக் கொள்கையில் தமிழக முதல்வர் எடப்பாடியார் உறுதியான நிலைப்பாட்டில் உள்ளார். இதில் எந்த மாற்றமும் இல்லை. கூட்டணி வேறு; கொள்கை வேறு. கூட்டணி என்பது துண்டு போன்றது. கொள்கை என்பது வேட்டி போன்றது. துண்டைத் தேவைப்பட்டால் தோளில் போடுவோம். இல்லையென்றால், ஓரமாக ஒதுக்கி வைத்து விடுவோம். இது அண்ணாவின் கொள்கையாகும். அரசியல் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடியாரும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் எடுக்கும் முடிவுகளுக்கு, அண்ணா திமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களும் கட்டுப்படுவார்கள். அடுத்து வரும் தேர்தலுக்கான அரசியல் வியூகங்களை வகுக்கும் வகையில்,  தமிழக முதல்வரும்,  துணை முதல்வரும் இணைந்து முடிவு எடுப்பார்கள்.

 

ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்த கலைஞர், தமிழகத்திற்கு எதுவுமே செய்யவில்லை. விருதுநகர் மாவட்டத்திற்கு எந்த திட்டமும் கொண்டு வரப்படவில்லை. அதிமுக ஆட்சியில்தான் விருதுநகரில் மருத்துவக் கல்லூரி, திருவில்லிபுத்தூர், சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டையில் அரசு கலை கல்லூரிகள்  கொண்டு வரப்பட்டடுள்ளன. ராஜபாளையத்தில் விரைவில் அரசு கலை கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

 

பட்டாசு தொழிலைப் பாதுகாக்க, 28 சதவீதமாக இருந்த ஜிஎஸ்டி வரியை, 18 சதவீதமாக குறைக்க பாடுபட்டது, அதிமுக ஆட்சியில்தான். தீப்பெட்டி தொழில் அழிந்துபோகும் என்று சொன்னார்கள். தீப்பெட்டிக்கு விதிக்கப்பட்டிருந்த 18 சதவீத வரியை, 12 சதவீதமாக குறைத்தது அதிமுக ஆட்சியில்தான். இதன்மூலம், 6 மாவட்டங்களில் நடைபெறும் தீப்பெட்டித் தொழில் பாதுகாக்கப்பட்டு, லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்பட்டுள்ளது. நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் கொடுத்தது எடப்பாடியார் ஆட்சியில்தான்..” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்