தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரும் 6ஆம் தேதி தமிழகம் முழுக்க ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பரப்புரை கால அவகாசம் இன்று (04.04.2021) மாலை 7 மணியுடன் நிறைவடைகிறது. அதனால், அனைத்து அரசியல் கட்சியினரும் தங்களது இறுதிக்கட்ட வாக்குச் சேகரிப்பில் தீவிரம் காட்டிவருகின்றனர். இந்நிலையில் இன்று காலை அதிமுக அமைச்சர் மாஃபா. பாண்டியராஜனின் ட்விட்டர் தளத்தில் நீட் தேர்வால் மறைந்த மாணவி அனிதா பேசுவதுபோல் வீடியோ ஒன்று வெளியானது. இது சமூக வலைதளங்களில் பரவி கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அனிதாவின் சகோதரர் மணிரத்னம், அரியலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் இன்று (ஏப்.04) அந்த வீடியோ தொடர்பாக புகார் மனு ஒன்றை அளித்தார். அதேவேளையில் பாண்டியராஜனின் ட்விட்டர் தளத்தில் அவ்வீடியோ டெலிட் செய்யப்பட்டது. மேலும், அந்த வீடியோவுக்கும் தனக்கும் சம்மந்தம் இல்லை என பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி தனது அனுமதியின்றி அந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.