ஆசிய ஹாக்கி பெடரேஷன் நடத்திய 2022 ம் ஆண்டிற்கான ஆசியக் கோப்பைக்கான ஹாக்கி தொடர் கடந்த மே 23 முதல் ஜூன் 1 வரை இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்றது. ஆசியக் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் இந்தியா, ஜப்பான், மலேசியா, தென்கொரியா, ஓமன், இந்தோனேசியா, பாகிஸ்தான் உள்பட 8 நாடுகள் பங்கு பெற்றன. இந்த தொடரில் இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கூறும் போது " இந்த போட்டியில் பங்கு பெற்ற இந்திய அணிக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளையும் தெரிவிப்பதுடன் இந்த அணியில் தமிழகத்தைச் சேர்ந்த மாரீஸ்வரன் சக்திவேல், கார்த்தி செல்வம் ஆகிய இரு வீரர்களும் பங்கு பெற்று மிகவும் அருமையாக தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணி வெண்கலப் பதக்கம் வெல்வதற்கு முக்கிய நபர்களாக இருந்திருக்கிறார்கள். இது நமது தமிழ் நாட்டிற்கு மிகவும் பெருமையாக உள்ளது. இந்திய அணிக்குப் பெருமையும் வாங்கி கொடுத்த தமிழக வீரர்கள் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம் " என்றார்.