Skip to main content

உள்ளூர் ஒப்பந்ததாரர்களுக்கே மேட்டூர் அனல்மின் நிலைய பணிகள்! முதல்வருக்கு நலச்சங்கம் கோரிக்கை!!  

Published on 08/09/2021 | Edited on 08/09/2021

 

Mettur Thermal Power Station works for local contractors! Union request for the chief minister!!

 

மேட்டூர் அனல் மின்நிலைய ஒப்பந்தப் பணிகளை உள்ளூரைச் சேர்ந்த சிறு, குறு ஒப்பந்ததாரர்களுக்கே வழங்க வேண்டும் என்று ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக, மேட்டூர் அனல் மின்நிலையம் (1 மற்றும் 2) ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் சார்பில் தமிழ்நாடு முதல்வர், மின்துறை அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது, ‘மேட்டூர் அனல் மின்நிலையம் 1,440 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்டது. தமிழகத்தின் மின் தேவையில் 10 சதவீத மின்சாரம் இங்குதான் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், மேட்டூர் அனல் மின்நிலையத்தில் 30 ஆண்டுக்கும் மேலாக ஒப்பந்தப் பணிகளை எடுத்துச் செய்துவரும் சிறு ஒப்பந்ததாரர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.   

 

மேட்டூர் அனல் மின்நிலையங்கள் துவங்கியது முதல் இன்றுவரை ஒப்பந்த பணிகளை எடுத்து, இரவு பகல் பாராமல் பணியாற்றிவருகிறோம். கரோனா போன்ற பேரிடர் காலங்களில் கூட தடையில்லா மின் உற்பத்திக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகிறோம். மேட்டூர் அனல்மின் நிலையங்களை நம்பி 200க்கும் மேற்பட்ட சிறு ஒப்பந்ததாரர்கள் உள்ளனர். ஒப்பந்தப் பணிகளை நாங்கள் பகிர்ந்து செய்து வருகிறோம். இதனால் எங்களைச் சார்ந்த 2,500க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில், பிளாண்ட் 1, பிளாண்ட் 2ல் சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் 1 மற்றும் 2, ஆபரேஷன் சர்க்கிளில் உள்ள அனைத்து ஒப்பந்த வேலைகளையும் இணைத்து, ஒரே டெண்டராக 5 ஆண்டுகளுக்கு விடப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  

 

அவ்வாறு ஒரே டெண்டராக விடப்பட்டால் சில பெரும் முதலாளிகள், வெளி மாநில மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் மட்டுமே பயன்பெறுவார்கள். இதனால்,  உள்ளூரைச் சேர்ந்த சிறு ஒப்பந்ததாரர்கள், அவர்களை நம்பி வாழும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். நாங்கள் செய்து முடித்த பணிகளுக்கு பில் தொகை மின் வாரியத்தில் இருந்து பெறுவதற்கு 9 மாதம் காலதாமதம் ஆனபோதும் கூட, ஒப்பந்தப் பணிகளை எவ்வித தொய்வுமின்றி செய்து வருகிறோம். மேட்டூர் அனல் மின்நிலைய ஒப்பந்தப் பணிகளை ஒரே நிறுவனத்திற்கு கொடுப்பதை ரத்து செய்து, உள்ளூர் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வேண்டும் என்று அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக கூறியது. இதையடுத்து, முந்தைய அதிமுக அரசு, ஒரே நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கும் முடிவைக் கைவிட்டது.  

 

உதாரணமாக, கடந்த அதிமுக ஆட்சியின்போது, மேட்டூர் அனல் மின்நிலைய பிளாண்ட் 2ல், நிலக்கரி கையாளும் பிரிவில் உள்ள பணிகளை சென்னையைச் சேர்ந்த ராதா இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இந்நிறுவனத்திற்கு ஒரு மாதத்திற்கு சுமார் 2 கோடி ரூபாய் வரை பராமரிப்பு பணிகள் கொடுக்கப்பட்டது. அதே ஒப்பந்தத்தை சிறு சிறு வேலைகளாக பிரித்து, உள்ளூரைச் சேர்ந்த சிறு ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டபோது, அதற்காக ஆன செலவு சுமார் 85 லட்சம் ரூபாய் மட்டுமே. எனவே, எங்களைப் போன்ற சிறு ஒப்பந்ததாரர்களால் எடுக்கப்பட்ட வேலையின் மதிப்பில் இரு மடங்கிற்கும் மேலாக ஒரே நிறுவனத்திற்கு தரப்பட்டால் மின் வாரியத்திற்கு மாதத்திற்கு சுமார் 1.15 கோடி இழப்பு ஏற்படுகிறது. ஏற்கனவே நட்டத்தில் இயங்கி வரும் மின்வாரியத்தை இது மேலும் பாதிக்கும். 

 

எனவே, தமிழக முதல்வர் எங்கள் கோரிக்கையை பரிசீலித்து, ஒரே டெண்டராக அளிக்கும் முடிவை ரத்து செய்ய வேண்டும். ஏற்கனவே நடைமுறையில் இருந்து வரும் டெண்டர் முறையை அமல்படுத்த வேண்டும். உள்ளூரைச் சேர்ந்த சிறு, குறு ஒப்பந்ததாரர்களும் டெண்டரில் பங்குபெற்று ஒப்பந்த பணிகளை தொடர்ந்து செய்து வர உத்தரவிட்டு, எங்களின் எதிர்காலத்தையும், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் காத்திடுமாறு வேண்டுகிறோம்.’ இவ்வாறு மனுவில் ஒப்பந்ததாரர்கள் தெரிவித்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்