Skip to main content

வாலிபரை கடத்தி ரூ. 80 லட்சம் கேட்டு மிரட்டல்; மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

Published on 17/12/2022 | Edited on 17/12/2022

 

man was kidnapped and threatened with 80 lakhs in Dharmapuri

 

தர்மபுரி அருகே வாலிபரைக் கடத்தி வைத்துக்கொண்டு 80 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டும் கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.  

 

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் கூத்தப்பாடி மடம் பகுதியைச் சேர்ந்தவர் கர்ணன். இவருடைய மகன் விஸ்வநாதன் (37). மும்பையில் நொறுக்குத்தீனி கடை வைத்திருந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த விஸ்வநாதன் இங்கேயே தங்கிவிட்டார். ஆனால், உள்ளூரில் நிரந்தரமான வேலை கிடைக்காததால் அவ்வப்போது கிடைத்த வேலைகளைச் செய்து வந்தார்.  

 

இந்நிலையில், டிச. 12 ஆம் தேதி காலை பென்னாகரம் சென்று வருவதாகக் கூறிவிட்டுச் சென்ற விஸ்வநாதன் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர். அவருடைய அலைபேசிக்கு தொடர்பு கொண்டபோது அது ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இதனால் பதற்றம் அடைந்த அவருடைய மனைவி மஞ்சுளா, கணவர் மாயமானது குறித்து ஒகேனக்கல் காவல்நிலையத்தில் புகாரளித்தார்.  

 

அந்தப் புகார் மனுவில், “என் கணவரின் செல்போனில் இருந்து அவருடைய தம்பி பூபதிக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், விஸ்வநாதனை கடத்தி வைத்திருப்பதாகவும், 80 லட்சம் ரூபாய் கொடுத்தால்தான் விடுவிப்போம். இல்லாவிட்டால், கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினர். இதேபோல மூன்று முறை மிரட்டினர். என் கணவரை அவர்களிடம் இருந்து மீட்டுக்கொடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

 

அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். காவல் ஆய்வாளர் மகேந்திரன் தலைமையிலான தனிப்படையினர் கடத்தல்  கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, பூபதிக்கு வந்த செல்போன் அழைப்பின் அடிப்படையில் மர்ம நபர்கள் எந்த டவர் எல்லையில் இருந்து பேசினர்? விஸ்வநாதன் காணாமல் போவதற்கு முன்பு அவருடைய செல்போனில் பதிவாகி உள்ள அழைப்புகளின் விவரங்களையும் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

 

 

சார்ந்த செய்திகள்