Skip to main content

சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

Published on 23/07/2020 | Edited on 23/07/2020

 

Perambalur

 

சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

 

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது மாணவி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பொம்பனபாடி கிராமத்தில் தனது பாட்டி வீட்டில் தங்கி வடலூரில் உள்ள ஒரு செவிலியர் பயிற்சிக் கல்லூரிக்கு படிப்பதற்குச் சென்றுவந்துள்ளார். அதே கிராமத்தைச் சேர்ந்த குமார் என்ற 23 வயது இளைஞர் மாணவியைக் காதலிப்பதாகத் தெரிவித்து, இருவரும் நெருக்கமாகப் பழகி வந்தனர். மாணவியைத் திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்த குமார், அவரை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

 

மேலும் கடந்த 2018 ஆம் ஆண்டு மாணவியைக் கடத்திச் சென்று கட்டாயத் திருமணம் செய்துள்ளார். இதனால் மாணவியின் பெற்றோர் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

                                                                                                                                 

புகாரின் அடிப்படையில் மகளிர் காவல்துறையினர், குமாரை போக்சோ (POCSO) சட்டத்தில் கைது செய்தனர். அது சம்பந்தமான வழக்கு பெரம்பலூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி மலர்விழி, நேற்று தீர்ப்பளித்துள்ளார்.

 

அதில் குமாருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும் 5,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார். 

 

18 வயதிற்குக் கீழுள்ள அத்தனைபேரும் சிறுவர்கள் (குழந்தைகள்) தான். அவர்களுக்குப் பாலியல் ரீதியாக, மன ரீதியாக அல்லது உடல் ரீதியாக துன்புறுத்தல் செய்வோரைத் தடுக்கவும் தண்டிக்கவும் உருவாக்கப்பட்டது தான் போக்சோ சட்டம். மக்களைப் பாதுகாக்க உருவாக்கப்படும் சட்டங்கள் முறையாகப் பயன்படுத்தப்பட்டால் மட்டுமே பாலியல் குற்றங்கள் நடக்கும்போது மக்கள் நம்பிக்கையுடன் புகார் தெரிவிக்க முன்வருவார்கள்.

 

அவ்வகையில் சிறுமிகளிடம் ஆசை வார்த்தை கூறி அவர்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தத் துணிந்தவர்களுக்கு சரியான தண்டனைகள் கிடைத்துள்ளது வரவேற்கத்தக்கது என்கிறார்கள் மகளிர் நல அமைப்பினர்.

 

 

சார்ந்த செய்திகள்