Skip to main content

பெரியார் பேருந்து நிலையத்தை கோபுர வடிவில் அமைத்தால் போராட்டம் வெடிக்கும் - கி.வீரமணி எச்சரிக்கை

Published on 31/08/2019 | Edited on 31/08/2019

 


மதுரை - பெரியார் பேருந்து நிலையத்தை, தந்தை பெரியாரைக் கொச்சைப்படுத்தும் வகையில், கோவில் கோபுர வடிவத்தில் சித்தரிக்கும் முயற்சியை அ.தி.மு.க. அரசு கைவிடவேண்டும். இல்லையெனில், மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைத்து கடும் போராட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

 

b

 

மதுரை மாநகரில் தந்தை பெரியார் பெயரில் பேருந்து நிலையம் 48 ஆண்டுகளுக்குமுன் உருவாக்கப்பட்டது. இந்தப் பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் சுமார் 344 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட திட்டம் தீட்டப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் துணை முதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலும் 20.1.2019 அன்று நடைபெற்றதோடு, அன்றைய நாளே புதிய கட்டுமானத்திற்கான வரைபடமும் வெளியிடப்பட்டது. மீனாட்சியம்மன் கோவில் கோபுர வடிவத்தில் வரைபடமும் வெளிவந்தது. அந்தக் கணமே கடும் எதிர்ப்பு வெடித்துக் கிளம்பியது.  அப்படி இருக்காது, மாற்றப்படும் எனக் கூறினர்.  அத்தோடு இந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்ததாகக் கருதவும்பட்டது. மாநகர ஆணையரும் அதனைத் தெளிவுபடுத்தினார்.

 

m

 

ஏனிந்த திடீர் மாற்றம்?

ஆனால், திடீரென்று நேற்றைய தினம் உள்ளாட்சித் துறை அமைச்சர்  வேலுமணி  மதுரை சென்றபோது, கோபுரம் வடிவிலான  வரைபடம் அடிப்படையிலேயே மதுரை பெரியார் பேருந்து நிலையம் வடிவமைக்கப்படும் என்ற செய்தி வெளிவந்துள்ளது எவ்வகையில் நியாயம்?

 

தந்தை பெரியாரைக் கொச்சைப்படுத்துவதா?

இதற்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் கண்டிக்கப்படத்தக்கவர்களேயாவார்கள். தந்தை பெரியார் பெயரில் நிர்மாணிக்கப்பட்ட ஒரு பேருந்து நிலையத்தை, கோவில் கோபுர வடிவத்தில் அமைப்பது எந்த வகையில் சரியானதாகும்? தந்தை பெரியாரைக் கொச்சைப்படுத்துவதோடு அல்லாமல், அப்படி வைக்கப்படும் கோவில் கோபுரமும் காலாகாலத்திற்கும் வீண் சர்ச்சைக்கும், வெறுப்புக்கும் உரியதாகவே ஆகும் என்று எச்சரிக்கிறோம். 

 

மதச்சார்பற்ற அரசின் வேலையாக இருக்கலாமா?

அண்ணாவின் பெயரையும், ‘திராவிட’ கலாச்சாரப் பெயரையும் கட்சியில் வைத்துக்கொண்டும், தந்தை பெரியார் பெயரையும் ஒரு பக்கத்தில் உச்சரித்துக் கொண்டும், சுவரொட்டிகளில் அவர் உருவத்தைப் பொறித்துக் கொண்டும், இன்னொரு பக்கத்தில் இவைகளுக்கு முற்றிலும் முரண்பாடாக அ.தி.மு.க. அரசு நடந்துகொள்வது கேலிக்குரியதேயாகும்.


மதச்சார்பற்ற அரசு கோவில் கோபுரத்தை நாடிச் செல்லலமா?
இன்னொரு வகையில் ஒரு மதச்சார்பற்ற அரசில், அரசுக்குச் சொந்தமான  நிறுவனத்தில் மத அடையாளத்தைப் புகுத்துவது சட்டப்படியும் தவறான ஒன்றே.  தமிழ்நாடு அரசு இதுபோன்ற வீண் வேலைகளில் ஈடுபடாமல் நாட்டுக்கு மிகவும் தேவையான வளர்ச்சிப் பணிகளில் நாட்டம் செலுத்துவதே நல்லது.

 

போராட்டம் வெடிக்கும் எச்சரிக்கை!

இல்லையெனில் மதச்சார்பற்ற சக்திகள், கட்சிகளை ஒன்றிணைத்துக் கடும் போராட்டத்தை நடத்திடும் நிலை ஏற்படும் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.
பாரதீய ஜனதா, ஆர்.எஸ்.எஸ். பின்னணியிலேயே பெரியார் பேருந்து கோபுரச் சின்னத்தைத் திணிக்கும் வேலையில் அ.இ.அ.தி.மு.க. அரசு ஈடுபடுகிறது என்றே பெரும்பாலான மக்கள் கருதும் நிலை ஏற்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
குளவிக்கூட்டில் கை வைக்கவேண்டாம்; வேண்டாத வேலையிலும்  அ.தி.மு.க. அரசு ஈடுபட வேண்டாம் - எச்சரிக்கை!


 

சார்ந்த செய்திகள்