கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில் வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. மயிலாடுதுறையில் அண்மையில் தென்பட்ட சிறுத்தையை பிடிக்கும் பணியானது ஏழு நாட்களுக்கும் மேலாக இன்று வரை தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், அம்பாசமுத்திரத்தில் வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் புகுந்த கரடி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்த, நபர் ஒருவரை கரடி துரத்துவதும், அந்த நபர் தலைதெறிக்க ஓடும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை ஒட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் புலி, சிறுத்தை, கரடி, யானை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் இருக்கும் நிலையில், தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு மலை ஓரத்தில் உள்ள கிராமங்களில் விலங்குகள் தஞ்சம் புகுவது வாடிக்கையாகி வருகிறது.
இந்த நிலையில் இன்று அதிகாலை கல்லிடைக்குறிச்சி பகுதிக்கு கரடி ஒன்று வந்துள்ளது. அதிகாலை வீட்டை விட்டு வெளியே வந்த ஒருவர், கரடியைப் பார்த்தவுடன் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி ஓடினார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த அம்பாசமுத்திரம் வனச்சரகர் நித்யா தலைமையிலான வனத்துறையினர் ஊருக்குள் புகுந்த கரடியைத் தேடி வருகின்றனர். பொதுமக்களுக்கு எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டு வருகிறது.