Skip to main content

அச்சுறுத்திய மக்னாவை அடக்கிய கும்கிகள்; மகிழ்ச்சியில் கிராமத்தினர்

Published on 09/12/2022 | Edited on 09/12/2022

 

Kumki suppressed the threatened Magna villagers happy

 

காடுகளின் பரப்பு தொடர்ந்து  குறைந்து வருவது, மனிதர்களின் ஆக்கிரமிப்பு, யானைகளின் வழித்தடங்கள் அழிப்பு மற்றும் காடுகளில் ஏற்படும் உணவு மற்றும் நீர் பற்றாக்குறை போன்ற காரணங்களால் மக்கள் வசிப்பிடங்களுக்கு யானைகளின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவது வாடிக்கையாகி உள்ளது. அவ்வாறு யானைகள் மக்களின் வசிப்பிடங்களுக்கு வரும் போது உயிர் சேதம் மற்றும் பொருளாதார இழப்புகளை ஏற்படுத்துகின்றன.

 

உலகில் ஆசிய இன யானை மற்றும் ஆப்பிரிக்க இன யானை என இரண்டு வகையான யானை இனங்கள் காணப்படுகிறது என்பதை நாம் அறிந்து இருப்போம். ஆனால், மேற்கு தொடர்ச்சி மலைகளில் காணப்படும் மரபணு குறைபாட்டால் தந்த வளர்ச்சி இன்றி பிறக்கும் ஆண் யானைகள் தான் மக்னா யானை என்று அழைக்கப்படுகிறது. பொதுவாகவே இந்த வகை யானைகள் உருவ அளவில் மிகப் பெரிதாகவும் மூர்க்கத்தன்மை கொண்டதாகவும் இருப்பதுடன் எப்போதும் தனிமையிலேயே சுற்றி வரும் இயல்பு கொண்டதாகவும்  இருக்கும்.

 

நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள கிராமங்களில் ஒன்றான பந்தலூர் கிராமத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு காட்டு யானைகளின் அச்சுறுத்தல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், கிராமப் பகுதிகளில் யானைகளின் அச்சுறுத்தல்களை குறைக்கும் வகையிலும், அடர்ந்த காட்டுப் பகுதியில் சுற்றித் திரியும் மக்னா யானையின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காகவும் ஐந்து  இடங்களில் பரண் அமைத்த வனத்துறையினர் மக்னா யானையைத் தேடும் பணியைத் தொடர்ந்து வந்த நிலையில், மக்னா யானை தமிழக - கேரள வனப்பகுதியில் சுற்றி வந்ததால் கண்காணிப்பதில் வனத்துறையினருக்கு சிரமம் ஏற்பட்டது.

 

இது அப்பகுதியில் வசிக்கும் கிராம மக்களை மேலும் அச்சமடைய செய்திருந்த நிலையில், நேற்று பி.எம்.2 என்ற மக்னா யானையை நான்கு கும்கி யானைகளின் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர். இந்த யானையை முதுமலையில் உள்ள வனப்பகுதியில் விட உள்ளனர். இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்