Skip to main content

பெண் குழந்தைகளை காக்க ‘கொப்பி கொட்டல்’ திருவிழா நடத்தும் கிராம மக்கள்

Published on 18/01/2023 | Edited on 18/01/2023

 

koppi kottal festival celebrated in pudukottai district seriyalur village 

 

புதுக்கோட்டையில் கிராமத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக பெண் குழந்தைகள் பங்கேற்று நடத்தும் வித்தியாசமான திருவிழா ஒன்று காலங்காலமாக நடந்து வருகிறது.

 

புதுக்கோட்டை மாவட்டம் செரியலூர் கிராமத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து வந்த ஒரு குடும்பத்தில் கொப்பியம்மாள் என்ற பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தை தனது பெரியப்பா வீட்டுக்கு காட்டு வழியாக செல்லும் போது காணாமல் போயுள்ளார். பல நாட்களுக்கு பிறகு அந்த கிராமத்தின் மையப்பகுதியில் உள்ள பழமையான பாலை மரத்தின் அருகில் அம்மை நோயால் பாதிக்கப்பட்டு அந்த சிறுமி இறந்ததாகக் கூறப்படுகிறது.

 

இந்நிலையில், சிறுமி கொப்பியம்மாள் அம்மை நோயால் பாதிக்கப்பட்டு இறந்ததால் அதன் பிறகு ஊரில் யாரும் அம்மை போன்ற கொடிய நோயால் பலியாகக் கூடாது என்பதற்காக அந்த ஊர் மக்கள் பல்வேறு சடங்குகளை ஆண்டுதோறும் தொடர்ந்து செய்து வருகின்றனர். ஒவ்வொரு வீட்டிலும் பிறக்கும் பெண் குழந்தைகள் நோய் நொடியிலிருந்து ஊரைக் காக்க பொங்கலுக்கு மறுநாள் விரதம் இருந்து வீட்டில் வெண்பொங்கல் வைக்க வேண்டும்.

 

மேலும், கன்று ஈனாத பசுங்கன்று சாணத்தில் ஒரு பெரிய பிள்ளையாரும் 92 சாணக் கொழுக்கட்டைகளும் பிடித்து, அதில் கிருமி நாசினிகளான கூழைப்பூ, ஆவாரம்பூ, அருகம்புல், வேப்பிலை போன்றவற்றை வைத்து கொப்பியம்மாள் இறந்த பழமையான பாலை மரத்தடியில் படையல் வைக்கின்றனர். இந்த விழாவில் பெண் குழந்தைகள் உள்ள வீடுகளில் அவர்களின் அம்மா மற்றும் சகோதரிகள் ஓலைக் கூடைகளைத் தூக்கிச் செல்கின்றனர்.

 

அதில், ஊர் மக்கள் அனைவரும் வழிபாடு செய்த நிலையில், பெண் குழந்தைகளின் வழிபாடு முடிகிறது. மேலும், 'கொப்பி கொட்டல்' என்பதே குறிப்பிட்ட திருவிழா நடக்கும் இடத்தின் பெயராக உள்ளது. அதுமட்டுமின்றி, தைத்திருநாளை கிராம மக்கள் ஆட்டம்பாட்டத்துடன் வரவேற்கும் வகையில், பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பைகளில் தேங்காய்களுடன் வந்து விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்கின்றனர். இந்த விளையாட்டில் தேங்காய்களை நேருக்கு நேர் மோத வைத்து உடைக்கும் நிகழ்வுகளும் நடைபெற்றது. 

 

 

 

சார்ந்த செய்திகள்