Skip to main content

மூணாறு பகுதியில் மக்களைக் கதறவிடும் படையப்பா!

Published on 13/12/2022 | Edited on 14/12/2022

 

h

 

மூணாறு, மலையும் மலை முகடுகள் சார்ந்த பகுதியையும் கொண்டது. தவிர பிற பகுதிகளில் திரும்பிய திசை எல்லாம் எஸ்டேட்கள் சூழ்ந்துள்ளன. கேரளாவின் மலை உச்சிப்பகுதியில் இருப்பதால் வருடம் முழுக்க மழையும் குளிரும்தான். எனவே பொழுது போக்குவதற்கு ரம்மியமான சூழல்களைக் கொண்டதால் இங்கு ஆரம்பக் காலங்களில் பயணிகள் தங்குவதற்காக அமைக்கப்பட்ட லாட்ஜ்கள், சுற்றுலாப் பயணிகளின் வரத்து நாளுக்கு நாள் அதிகரிக்க, அவர்களை மேலும் ஈர்க்கிற வகையில் மலை முகடுகளில் ரிசார்ட்கள் முளைக்கத் தொடங்கின. மேலும். பாலாறு, எக்கோ பாயிண்ட், படகு சவாரி போன்ற பகுதிகள் வேறு சுற்றுலாப் பயணிகளின் ஈர்ப்பு பகுதியானதால் விடுமுறை நாட்களில் மூணாறு சுற்றுலாப் பயணிகளால் திணறும் மலைப் பிரதேசமானது. தொடர்ந்து வணிகம் பொருட்டு பிரதான சாலைகளில் பயணிகளுக்குப் பயன்படுகிற வகையில் பழ வகைகள், காய்கறிகளைக் கொண்ட கடைகளின் வியாபாரமும் செழிப்பாயின.

 

மலையும் மலை சார்ந்த பகுதி என்றில்லாமல் சுற்றுலாத் தளமானதால், அவ்வப்போது உணவின் பொருட் காட்டு யானைகளும் தரையிறங்கி விடுவதுண்டு. மூன்று பெண் யானைகளுக்கு ஒரு ஆண் யானை அரவணைத்துக் கொண்டு விவசாயப் பகுதிகளில் புகுந்து விடும் என்கிற மூணாறு வாசிகள் அவைகள் நன்றாக விளைந்த வாழைகளின் உள் தண்டுகளை விரும்பிச் சாப்பிடும். இதனால் வாழை விவசாயம் சேதப்படுவதால் வனத்துறையினர் அவைகளைக் காட்டுப் பகுதிக்குள் விரட்டி விடுவதுண்டு.

 

காட்டு யானைகளின் வரத்து அவ்வப்போது இருந்தாலும் சில ஒற்றை யானைகளும் மூணாறு சாலைப் பகுதிக்குள் அடிக்கடி புகுந்து விடுமாம். அதுபோன்ற ஒற்றை யானைகளுக்குக் கொம்பன், ஒற்றைக் கொம்பன் யானை என்று பெயரிட்டுள்ளனர். அப்படிப் பெயர் வைக்கப்பட்ட யானைகளில் ஒன்று தான் படையப்பா.

 

மூணாறு பகுதிக்குள் வந்து செல்லும் படையப்பா யானை தனது உணவுத் தேவை முடிந்ததும் காட்டுக்குள் சென்றுவிடும்; யாரையும் துன்புறுத்தாது அதனால்தான் அந்த யானைக்குப் படையப்பா என்று மூணாறுவாசிகள் செல்லப் பெயர் வைத்துள்ளனராம். அடிக்கடி நகர்வலம் வரும் படையப்பா சுற்றுப்புற எஸ்டேட் பகுதிகள், சாலையோரங்கள், குடியிருப்பு பகுதிகளில் ஜாலியாக உலா வரும். அதற்கு உற்சாகம் வந்துவிட்டால் மாட்டுப்பட்டி, எக்கோ பாயிண்ட் பாலாறு, உள்ளிட்ட இடங்கள், மக்கள் வசிக்கும் பகுதிகளில் புகுந்து சாலையோர கடைகளை அடித்து துவம்சம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளது. இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதுடன் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களையும் விரட்டி மிரட்டிவிடும். தனக்கு வேண்டிய பழங்களைத் தின்று தீர்த்துவிடும். பாசமான படையப்பா யானையின் வீதி உலாவின் போது நடக்கிற வாடிக்கையான செயல்கள் இவை என்கிறார்கள்.

 

இந்தச் சூலில் நேற்று முன்தினம், மாட்டுப்பட்டி படகு சவாரி மையம் அருகிலுள்ள சாலையில் உலா வந்த படையப்பா யானை, திடீரென்று அங்கிருந்த ஜான்சன், சுகன் உள்ளிட்டோரின் கடைகளைத் துவம்சம் செய்திருக்கிறது. அதிலிருந்த அன்னாசிப் பழம், மக்காச் சோளம், இளநீர் போன்றவற்றை ஆவலாகத் தின்று முடித்தது. படையப்பாவின் இந்த அதகளத்தால் வட்டவடை சாலையின் போக்குவரத்து ஒரு மணி நேரமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து நெற்றிமேடு டிவிஷனில் வீட்டின் முன் நிறுத்தியிருந்த ராமன் என்பவருக்குச் சொந்தமான காரை சேதப்படுத்தியது. அடிக்கடி மூணாற்றுக்குள் விசிட் அடிக்கும் படையப்பா இப்படிச் செய்தாலும் அந்த யானையை வாகனங்களில் பின் தொடர்ந்து சென்று வீடியோ எடுப்பது, அதன் மீது தண்ணீர் பாட்டில்களைக் கொண்டு எறிவது, வாகனத்தின் ஹாரன் ஒலிப்பான்களை அதிக டெசிபலில் சப்தம் எழுப்பக் கூடாது எனச் சுற்றுலாப் பயணிகளுக்கு மூணாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

ஒரு பக்கம் தொந்தரவான படையப்பா என்ற பெயர் இருந்தாலும் படையப்பா வழியில் செல்கிற மக்களைத் துன்புறுத்தாது. அச்சப்படுத்தாது. செல்லப்பிள்ளை போல சாலையில் சென்றாலும் ஓரமாகவே படையப்பா செல்வார். அவரைப் பார்க்கும்போது பாகனுக்கு கட்டுப்பட்டவர் போன்று தெரிகிறது. பாகனால் பராமரிக்கப்பட்டு வந்ததால்தான் படையப்பா அமைதியாகவே செல்வதாகத் தெரிகிறது. ஒரு வேளை பாகனால் பராமரிக்க முடியாமல் போனதால் அவர் இப்படி உலா வருகிறார் என்றும் சொல்கிறார்கள் மூணாறு பகுதியினர். பதற விடும் அட்டகாசமான படையப்பா என்றாலும் ஆதரவான படையப்பா தான்.

 

 

சார்ந்த செய்திகள்