Skip to main content

"உள்ளாட்சியில் கொள்ளை ஆட்சி நடத்தியது அ.தி.மு.க."- கே.பாலகிருஷ்ணன் பேச்சு!

Published on 17/02/2022 | Edited on 17/02/2022

 

 

k.balakrishnan election campaign local body election at cuddalore district

 

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 5வது வார்டில் தஸ்லிமா மற்றும் 33வது வார்டில் முத்துக்குமரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், 5வது வார்டு பகுதிக்கு உட்பட்ட லப்பை தெரு, முத்துமாணிக்கம் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை நேரில் சந்தித்து, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

 

அப்போது பொதுமக்கள் மத்தியில் அவர் பேசியதாவது, "அ.தி.மு.க.வில் இருந்த கூட்டணி கட்சியினர் இவர்களுடன் இருந்தால் கிடைக்கிற வாக்கும் கிடைக்காது எனக் கருதி ஆளுக்கு ஒரு முறையாக விலகிச் சென்று விட்டனர்.  தற்போது அ.தி.மு.க. அகதியாக  உள்ளது. ஆனால் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி பலம் பொருந்திய வெற்றிக் கூட்டணியாகத் திகழ்கிறது. இது தமிழகம் முழுவதும் வெற்றி முரசை கொட்டும். 

 

அ.தி.மு.க.வினர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கொள்கைகளை விட்டுவிட்டு மோடியிடம் சரணாகதி ஆகியுள்ளனர்.  ஸ்டாலின் முதல்வர் ஆன பிறகுதான் அடித்தட்டு மக்கள் அதிகாரப் பரவலுக்கு வர நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மூலம் வாய்ப்பு அளித்துள்ளார்.  ஆனால் எடப்பாடி மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தால், இன்னும் 10 ஆண்டுகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலே வந்திருக்காது. அவர்கள் தேர்தல் நடத்தியிருந்தால், டெபாசிட் கூட வாங்கி இருக்க முடியாது என அவர்களுக்கே தெரிந்துதான் தேர்தலை நடத்தவில்லை.

 

அ.தி.மு.க. ஆட்சியில் பெனாயில், சுண்ணாம்பு, பல்பு சாக்கடை மூடி உள்ளிட்டவற்றில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த வேலுமணிக்கு கமிஷன். அவர்  தமிழகத்துக்கே உள்ளாட்சித் துறையில் மொத்த வியாபாரியாகச் செயல்பட்டார். எனவே அ.தி.மு.க.வினர் உள்ளாட்சியில் கொள்ளை ஆட்சியை நடத்தினார்கள் 

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சிதம்பரம் நகர் மன்ற தலைவராக இருந்த பவுசியாபேகம் சிதம்பரத்தில் நூலகம் கட்டுவதற்காகப் பல கோடி மதியுள்ள இடத்தை ஒதுக்கித் தீர்மானம் நிறைவேற்றிக் கொடுத்தார்.  ஆனால் அதன் பிறகு வந்த அ.தி.மு.க. அரசு நூலகம் கட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  10 ஆண்டுகளில் என்ன செய்தீர்கள் எனக் கேள்வி எழுப்பினார்.

 

நகர்ப்புற பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்களுக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டுமென எடப்பாடியிடம் தொடர்ந்து போராடி வந்தோம். காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. ஆனால் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதும், இந்தக் கோரிக்கையை வைத்தோம். உடனடியாக ரூபாய்100 கோடி ஒதுக்கிப் பரீட்சார்த்த முறையில் அந்தத் திட்டம் நகர்ப்புறத்தில் அமல்படுத்தப்படுகிறது.  தி.மு.க. வெற்றி பெற்றால் சிதம்பரம் நகராட்சி பகுதியில் 100 நாள் வேலை ஏழைகளுக்கு வழங்கப்படும்.

 

ஆட்சியில் இருக்கும்போதே எதையும் செய்யாதவர்கள் மீண்டும் வந்தால் இன்னும் ஐந்து வருடத்திற்குச் சிதம்பரம் நகராட்சி இருட்டாகத்தான் இருக்கும்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்