கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 44 கிராம ஊராட்சிகள் உள்ளன இந்த ஊராட்சிகளில் நானூற்றுக்கும் மேற்பட்ட துணை கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட துணைத்தலைவர்கள் 44 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக சங்கராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர். தற்போது இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு அவர்கள் கூறும் காரணம் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊராட்சிகளில் நடைபெறும் திட்டப் பணிகள், அலுவலக செயல்பாடுகள், அரசு அறிவிக்கும் திட்டங்கள், அரசு திட்டங்களில் பயன்பெறும் பயனாளிகள் பட்டியல் உட்பட பல்வேறு தகவல்களை துணைத் தலைவர்களுக்கு தெரியப்படுத்துவதில்லை. ஊராட்சிகளில் தலைவர்களுக்கு அமர்வதற்கு இருக்கை உள்ளது போன்று துணைத் தலைவருக்கும் இருக்கைகள் வழங்க வேண்டும். அரசு அதிகாரிகள் கிராம வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய வரும்போது ஊராட்சி செயலாளர்கள், தலைவர்கள் துணைத் தலைவருக்கு தகவல் தெரிவிப்பது கிடையாது. ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு மாதந்தோறும் அரசு மதிப்பூதியம் வழங்குகிறது. அதேபோல் துணைத் தலைவருக்கும் மதிப்பூதியம் வழங்க வேண்டும்.
100 நாள் வேலை திட்டத்தில் ஊராட்சிகளின் தலைவர்களின் உறவினர்கள் வேலைக்கு வராமல் வருகை பதிவேட்டில் பெயர் பதிவு செய்யப்படுகிறது. பல ஊராட்சி தலைவர்கள் துணைத் தலைவர்களை அடிமைகள் போல் நடத்துகிறார்கள். எனவே இவ்வளவு அவமானங்கள், அடிமைத்தனங்களை பொறுத்துக்கொண்டு துணைத் தலைவர் மற்றபடி எப்படி வேலை செய்ய முடியும். எனவே, துணைத் தலைவர் பொறுப்பில் இருக்க விரும்பவில்லை. எனவே, நாங்கள் 44 பேரும் ராஜினாமா செய்கிறோம் என்று கூறி ஒன்றாகக் கையெழுத்திட்ட மனுவை ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கொடுத்துள்ளனர். இது கள்ளக்குறிச்சி மாவட்ட அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.