கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட க.அலம்பலத்தைச் சோ்ந்தவர் வனிதா. இவர் அதே ஊராட்சியில் துப்புரவு தொழிலாளராக பணியாற்றி வருகிறார். அப்பகுதியில் உள்ள துப்புரவு தொழிலாளர்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு குப்பை அள்ளுவதற்காக பேட்டரியால் இயங்கக்கூடிய குப்பை சேகரிப்பு வாகனம் அரசால் வழங்கப்பட்டது.
அந்த வாகனத்தை துப்புரவு பணியாளர்களான சுபாஷினி, செல்வி வனிதா, வள்ளி ஆகிய நான்கு பேரும் அந்த ஊர் பள்ளி மைதானத்தில் ஓட்டி பழகி உள்ளனர். மதிய நேரம் பயிற்சி முடித்த பின் சுபாஷினி, செல்வி, வள்ளி ஆகியோர் அவரவர் வீட்டுக்கு சென்றுவிட்டனர். இதில் வனிதா தனது ஆறு வயது மகன் பாலாஜியை அந்த வண்டியில் உட்கார வைத்து ஓட்டியுள்ளார். அப்போது வண்டியில் உட்கார்ந்திருந்த பாலாஜி ஆர்வமிகுதியால் வண்டியின் ஆக்சிலேட்டரை வேகமாக திருக்கியுள்ளார்.
இதனால் வண்டி வேகமெடுத்து நிலை தடுமாறி சாலையோரம் இருந்த சின்னராசு என்பவரின் 90 அடி ஆழமுள்ள கிணற்றில் தலைகுப்புற கவிழ்ந்துள்ளது. அதில் தாயும் மகனும் தண்ணீரில் மூழ்கினர். இதைப்பார்த்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதில் மயக்க நிலையில் இருந்த வனிதாவை காப்பாற்றியுள்ளனர். அவரது மகன் பாலாஜி தண்ணீரில் மூழ்கியதால் அவனை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து கள்ளக்குறிச்சி தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் விரைந்து வந்து கிணற்றுக்குள் இறங்கி 5 மணி நேரம் தேடி வாகனத்தையும் சிறுவன் பாலாஜியின் உடலையும் மீட்டு கயிறு கட்டி வெளியே கொண்டுவந்தனர். ஒரு சிறுவனின் உயிர் பலிக்கு அவனது தாயார் காரணமாக அமைந்தது அவ்வூர் மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கிராமங்களில் குப்பை அள்ளும் மகளிர் குழுவினர்களுக்கு இது போன்ற வாகனங்களை ஓட்டுவதற்கான பயிற்சி இல்லை. அப்படிப்பட்ட நிலையில் போதிய பயிற்சி இல்லாதவர்களிடம் வாகனங்களை கொடுத்து அதிகாரிகள் இயக்க சொல்வது மிகவும் கண்டிக்கத்தக்கது. அப்படிப்பட்ட தொழிலாளிகளுக்கு முறையான பயிற்சி அளித்த பிறகே வாகனங்களை கொடுத்து இயக்க சொல்ல வேண்டும். இது போன்ற அடிப்படை விஷயங்களைக் கூட அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் நடந்து கொள்வதால் தான் இதுபோன்ற உயிரிழப்புகள் நேரிடுகின்றன என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.