Skip to main content

'கலைஞர் 100' நிகழ்ச்சி இடமாற்றம்!

Published on 25/12/2023 | Edited on 25/12/2023
'kalaignar 100' show transfer

திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாகப் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் கலைஞரின் பங்களிப்பைப் போற்றும் விதமாக ‘கலைஞர் 100’ விழாவை பிரம்மாண்டமாக நடத்த கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் தொடர்ச்சியாகத் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் சங்கம், பெப்சியில் உள்ள 24 சங்கங்களும் கலந்துகொண்டு வருகிறார்கள்.

இந்த சூழலில் இந்த நிகழ்ச்சி தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில், திரையுலகின் மற்ற சங்கங்களுடன் இணைந்து வருகிற 24 ஆம் தேதி நடப்பதாகத் திட்டமிடப்பட்டது. இதையடுத்து இந்த நிகழ்ச்சி தள்ளிப் போய் அடுத்த மாதம் 6 ஆம் தேதி (06.01.2024) சனிக்கிழமை அன்று மாலை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுவதாக அறிவிப்பு வெளியானது. இதனால் ஜனவரி 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் அனைத்து விதமான தமிழ் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஜனவரி 6 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவிருந்த 'கலைஞர் 100' நிகழ்ச்சி கிண்டி ரேஸ் கோர்ஸ் திறந்தவெளி மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. ரஞ்சிக்கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளதாலும், இடவசதிக்காகவும் புதிய இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சார்ந்த செய்திகள்