Skip to main content

சேலத்தில் ஜல்லிக்கட்டு திருவிழா; சீறிப் பாய்ந்த காளைகள்; மல்லுக்கட்டிய காளையர்கள்! 

Published on 23/05/2023 | Edited on 23/05/2023

 

Jallikattu festival in Salem

 

சேலம் அருகே, நிலவாரப்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டு திருவிழா கிராம மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.    

 

சேலம் அருகே உள்ள நிலவாரப்பட்டியில் மே 21 ஆம் தேதி ஜல்லிக்கட்டு திருவிழா நடந்தது. இதில் சேலம் மட்டுமின்றி கள்ளக்குறிச்சி, திருச்சி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 600 காளைகள் பங்கேற்றன. மாடுகளை அடக்க, 300 காளையர்களும் களத்தில் இறங்கினர். ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் அசம்பாவிதங்களைத் தடுக்க, போட்டி தொடங்குவதற்கு முன்பாக மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளுக்கும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி, ஜல்லிக்கட்டுப் போட்டி முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. போட்டியின்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வாசிக்க, மாடுபிடி வீரர்களும் அதைப் பின்பற்றி உறுதிமொழி ஏற்றனர். அதன்பிறகே போட்டி தொடங்கியது. ஆட்சியர், கொடியசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார்.    

 

வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்த காளைகளை, காளையர்கள் ஆர்வத்துடன் அடக்க முயன்றனர். இந்தப் போட்டியில் மாடுபிடி வீரர்கள் 19  பேரும், காளைகளின் உரிமையாளர்கள் 43 பேரும் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சீறிப் பாய்ந்து வந்த காளைகளை நெஞ்சுரத்தோடு எதிர்த்து நின்று அடக்கிய காளையர்களுக்கு மிதிவண்டி, எல்இடி தொலைக்காட்சிப் பெட்டி, பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. நிலவாரப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் ஜல்லிக்கட்டு போட்டியை ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.   

 

காளைகளை அடக்கிய காளையர்களுக்கும், யார் கையிலும் சிக்காமல் அடங்காத காளைகளுக்கும் அமைச்சர் கே.என்.நேரு பரிசுகளை  வழங்கினார். இந்த விழாவில், அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.ஆர். பார்த்திபன் எம்.பி., கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம்,  சேலம் வருவாய் கோட்டாட்சியர் மாறன் (பொறுப்பு), பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பாரப்பட்டி சுரேஷ்குமார், தமிழ்நாடு ஜல்லிக்கட்டுப் பேரவைத் தலைவர் ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 108 ஆம்புலன்ஸ் வசதி, மருத்துவக் குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தனர். மாவட்ட  காவல்துறை எஸ்.பி., சிவக்குமார் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. 

 

 

சார்ந்த செய்திகள்