Skip to main content

நாம் நினைத்தால் திமுக என்ற கட்சி இல்லாது போகும் - எடப்பாடி பழனிசாமி சவால்!

Published on 11/02/2022 | Edited on 11/02/2022

 

hgj

 

திண்டுக்கல் மாவட்டத்தில் அதிமுக சார்பில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர்களான நத்தம் விசுவநாதன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு பேசியதாவது:-

 

"திண்டுக்கல்லுக்கு அண்ணா தான்,  முதன் முதலாக திமுகவை சேர்ந்த முதல் மாநகராட்சி மேயர். திமுகவினருக்கு நகர்ப்புற தேர்தலை நடத்த எண்ணம் இல்லை. உச்சநீதிமன்றம் சொல்லியதால் தான் நடத்த முன் வந்தனர்.  தற்போது உள்ள சூழ்நிலை அதிமுகவினருக்கு மிகவும் சாதகமாக உள்ளது. தமிழகத்தில் தற்பொழுது நடைபெற்று வருவது அலங்கோலமான ஆட்சி திறமையற்ற முதல்வர் நாட்டை ஆண்டு வருகிறார்.

 

திமுக என்பது குடும்ப கட்சி மற்றும் கார்ப்பரேட் நிறுவனம் கட்சியாக மாறி பணத்தை மட்டும் நம்பியே கட்சியை நடத்தி வருகிறது. நாம் ஆட்சியில் இருந்தபொழுது 9 இடைத்தேர்தல் மற்றும் ஊரக உள்ளாட்சி தேர்தல்களை நாம் நியாயமாக நடத்தினோம். அன்றைய தினம் நாம் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்திய பொழுது நாம் நினைத்திருந்தால் ஒரு திமுக கவுன்சிலர் கூட வந்திருக்க முடியாது. ஆனால் நாம் நேர்மையாக தேர்தலை நடத்தினோம். நாம் நினைத்தால் எதிர்காலத்தில் திமுக என்ற கட்சி இல்லாது போகும் சூழலை உருவாக்குவோம். திமுக ஆட்சியாளர்கள் மக்களை ஏமாளிகள் என்று நினைக்கிறார்கள். நகர் மன்ற உள்ளாட்சி தேர்தல் என்பது மிகவும் முக்கியமான தேர்தல் இந்த தேர்தலில் வெற்றிபெறும் வேட்பாளர்கள் நகர வளர்ச்சிக்கு உதவுவார்கள். அன்றாட பிரச்சினைகளுக்கு உதவும் வகையில் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.


 
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது 525 வாக்குறுதிகளை திமுக கொடுத்து அவற்றில் இதுவரை எதுவும் நிறைவேற்றவில்லை ஆனால் 70% நிறைவேற்றி விட்டதாக ஸ்டாலின் பொய் கூறுகிறார். அவரது மகன் உதயநிதி 90% நிறைவேற்றி விட்டதாக கூறுகிறார். இருவரும் மாறி மாறி பச்சைப் பொய் கூறி வருகின்றனர். நீட் தேர்வு தமிழகத்திற்கு வருவதற்கு திமுக மற்றும் காங்கிரஸ் காரணம். காங்கிரஸ் ஆட்சியில் குலாம் நபி ஆசாத் அமைச்சராக இருந்த போதுதான் நீட் தேர்வு வந்தது. இது தொடர்பாக நேருக்கு நேர் விவாதம் செய்ய தயாரா என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கேட்டுள்ளார். இது தொடர்பாக நேரடி விவாதத்திற்கு ஸ்டாலினுடன் விவாதிக்க நான் தயார்" என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்