Skip to main content

பாஞ்சாங்குளத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு! 

Published on 18/09/2022 | Edited on 18/09/2022

 

Heavy police security in Panjangulam

 

தென்காசி மாவட்டம், சங்கரன் கோவில் அருகே ஊர் கட்டுப்பாடு விதித்திருப்பதாக கூறி பெட்டிகடையில் பட்டியலின மாணவர்களுக்கு தின்பண்டங்கள் வழங்க மறுத்தது தொடர்பாக அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

 

தென்காசி மாவட்டம், பாஞ்சாகுளம் எனும் கிராமத்தில் பள்ளிக்கு சென்ற பட்டியலின மாணவர்கள் அந்த ஊரில் இருக்கும் பெட்டிக்கடையில் தின்பண்டங்கள் வாங்க சென்றபோது அந்த கடையிலிருந்தவர் அவர்களுக்கு தின்பண்டங்கள் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அந்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்தது. 

 

அந்த வீடியோ பதிவில், “போங்க போய் உங்க வீட்ல போய் சொல்லுங்க. தின்பண்டம் கொடுக்க மாட்டேங்கிறாங்கன்னு. தின்பண்டம் கொடுக்க மாட்டாங்க டா. ஊர்ல கட்டுப்பாடு வந்துருக்கு. ஊர்ல ஒரு கூட்டம் போட்டு பேசி இருக்கு உங்க தெருல யாருக்கும் எதுவும் கொடுக்க கூடாதுனு சொல்லி. இனிமே இங்க யாரும் வந்து தின்பண்டம் வாங்க வேண்டாம். போங்க” என அந்த கடைக்காரர் பேசி இருந்தார்.

 

இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்படை அமைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்த கிராமத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியின் போது இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் தான் இந்த பிரச்சனைகளுக்கு பின்னணி காரணம் என சொல்லப்படுகிறது. இந்த கிரிக்கெட் போட்டியில் ஏற்பட்ட பிரச்சனையின் போது சாதியை சொல்லி ஒரு பிரிவினர் திட்டியதாக சொல்லப்படுகிறது. மேலும் பட்டியலின மக்களை தக்கியதாக 4 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 

இதனை தொடர்ந்து தற்போது வெளியான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதை அடுத்து அந்த கிராமத்திற்கு விரைந்த கோட்டாட்சியர் அந்த கடைக்கு சீல் வைத்துள்ளார். மேலும் தற்போது கடை உரிமையாளர் உட்பட இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

 

இந்நிலையில், பாஞ்சாங்குளத்தில் தடுப்புகள் அமைத்து போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், பாஞ்சாங்குளம் பகுதிக்கு வரும் வாகனங்களை காவல்துறையினர் பரிசோதனை செய்து அனுப்பிவருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்