Skip to main content

'தனியார் பால் விலை கொள்ளையை அரசு வேடிக்கை பார்க்க கூடாது'-பாமக அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Published on 19/10/2022 | Edited on 19/10/2022

 

 'Government should not make fun of private milk price robbery'-Pmk Anbumani Ramadoss insists

 

தனியார் நிறுவனங்கள் தங்களுக்குள் கூட்டணி அமைத்துக் கொண்டு 3 மாதங்களுக்கு ஒரு முறை பால் விலையை உயர்த்தி வருவது கண்டிக்கத்தக்கது. மக்களை பாதிக்கும் பால் விலை உயர்வை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் அரசு வேடிக்கை பார்ப்பது வருத்தமளிக்கிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பான அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில, 'தமிழ்நாட்டிலுள்ள பால் மொத்த விற்பனையாளர்களுக்கு தனியார் பால் நிறுவனங்கள் கடந்த வாரம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்படுவதாகவும், இந்த வாரத்தின் இறுதியில் விலை உயர்வு நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களின்படி 3% கொழுப்புச் சத்துள்ள பாலின் விலை லிட்டர் ரூ.48-லிருந்து ரூ.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 6% கொழுப்புச் சத்துக் கொண்ட நிறை கொழுப்பு பாலின் விலை லிட்டருக்கு ரூ.72 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நியாயமில்லாதது.

 

ஆவினில் 3% கொழுப்புச் சத்துள்ள பால் லிட்டர் ரூ.40-க்கு விற்கப்படும் நிலையில், தனியார் பால் விலை அதை விட 25% அதிகமாக உள்ளது. 6% கொழுப்பு சத்து கொண்ட ஆவின் பாலின் விலை லிட்டர் ரூ.48 மட்டும் தான். ஆனால், அதே பாலை தனியார் நிறுவனங்கள் 50% விலை உயர்த்தி ரூ.72-க்கு விற்பனை செய்கின்றன. பாலின் விலையில் அதிகபட்சமாக 5% வரை வித்தியாசம் இருக்கலாம். ஆனால், பாலின் விலையில் 50% வித்தியாசம் இருப்பதும், ஆண்டுக்கு 4 முறை தனியார் நிறுவனங்கள்  பால் விலையை உயர்த்துவதும் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாதவையாகும்.

 

n

 

பால் கொள்முதல் விலை அதிகரித்திருப்பதும், பாலை அடைத்து விற்பதற்கான பிளாஸ்டிக் உறைகளை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களின் விலைகள் அதிகரித்திருப்பதும் தான் பால் விலை உயர்வுக்கு காரணம் என்று தனியார் நிறுவனங்களின் தரப்பில் கூறப்படுகிறது. இது முற்றிலும் தவறான தகவல் ஆகும். தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு வழங்கும் கொள்முதல் விலை உயர்த்தப்படவே இல்லை என்று பால் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல், பிளாஸ்டிக் உறைகள் தயாரிப்பு செலவு என்பது மிக மிக குறைவான ஒன்றாகும். அதைக் காரணம் காட்டி பால்விலை உயர்த்தப்படுவதாக தனியார் பால் நிறுவனங்கள் கூறுவது பால் உற்பத்தியாளர்களையும், மக்களையும் ஏமாற்றும் செயலாகும்.

 

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் தனியார் பால் விலை உயர்த்தப்படுவது இது ஆறாவது முறையாகும். இந்த குறுகிய காலத்தில் எந்த அத்தியாவசியப் பொருட்களின் விலையும் இந்த அளவுக்கு உயர்த்தப் படவில்லை. தனியார் நிறுவனங்கள் தங்களுக்குள் கூட்டணி அமைத்துக் கொண்டு பால் விலையை உயர்த்துவதை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இப்போது பணவீக்கம் அதிகரித்திருக்கிறது. இத்தகைய சூழலில் பால் விலையும் தொடர்ச்சியாக உயர்த்தப்பட்டால் தமிழகத்தில் ஏழை & நடுத்தர மக்கள் வாழ முடியாத அவல நிலை உருவாகி விடும்.

 

தமிழக அரசு நினைத்தால் தமிழ்நாட்டில் தனியார் பால் விலையை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்று பல மாதங்களாக கூறி வரும் பா.ம.க, அதற்காக இரு வழிகளையும் பரிந்துரைத்து வருகிறது. முதலாவது தமிழ்நாட்டில் பால் விலை ஒழுங்குமுறை ஆணையத்தை அமைப்பதாகும். தனியார் பால் நிறுவனங்களின் பால் உற்பத்திச் செலவை கணக்கிட்டு, அவற்றின் பாலுக்கான விலையை ஒழுங்கு முறை ஆணையமே நிர்ணயிக்கும். அதனால், தனியார் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்த முடியாது.

 

பால் விலையை கட்டுப்படுத்துவதற்கான மற்றொரு நடவடிக்கை ஆவின் பால் நிறுவனத்தின் சந்தை  பங்கை அதிகரிப்பது ஆகும். தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் தொடங்கப்பட்டு 64 ஆண்டுகள் ஆகியும் கூட, அதன் சந்தை பங்கு 16 விழுக்காட்டை தாண்டவில்லை. பால் சந்தையில் 84% தனியார் நிறுவனங்களிடம் இருப்பதால் தான் அவற்றின் ஆதிக்கத்தை அரசால் தடுக்க முடியவில்லை. மாநிலம் முழுவதும் ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்க உழவர்கள் காத்துக் கிடக்கின்றனர். அவர்களிடமிருந்து  பால கொள்முதல் செய்து, விற்பனையை அதிகரித்தால் பால் சந்தையில் 50 விழுக்காட்டை ஆவின் நிறுவனத்தால் கைப்பற்ற முடியாது. அத்தகைய வலிமையான நிலைக்கு ஆவின் உயர்ந்தால் தான் பால் சந்தையில் தனியார் நிறுவனங்களின் விலைக் கொள்ளையை தடுக்க முடியும். இதை கடந்த பல ஆண்டுகளாக பா.ம.க. வலியுறுத்தி வரும் போதிலும், அதை தமிழக அரசு செயல்படுத்தவில்லை.

 

மக்களின் அத்தியாவசியத் தேவையான பால் விலை கட்டுக்குள் அடங்காமல் உயர்த்தப்படுவதை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. அதை தடுப்பதற்கான உடனடி நடவடிக்கையாக பால் விலை ஒழுங்குமுறை ஆணையத்தை அரசு அமைத்து, பாலுக்கான அதிகபட்ச விற்பனை விலையை நிர்ணயிக்க  வேண்டும். அத்துடன் படிப்படியாக ஆவின்   பால் உற்பத்தியை அதிகரித்து தனியார் நிறுவனங்களின் ஏகபோகத்தை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்